மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? - (மத்தேயு 16:26). ஒருகுடியானவன் ஒரு புதிய ஊருக்கு சென்றான். அந்த ஊரின் அழகையும், வளத்தையும் கண்டு மயங்கினான். ஆகவே அந்த ஊரில் தனக்கென்று கொஞ்சம் நிலம் வாங்க எண்ணி, ஊர்த்தலைவரிடம் சென்றான். அவர் அவனிடம் ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு, ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுடன் சில ஊர் மக்களும் சென்றிருந்தனர். . ஊர்த்தலைவர் அவனைப் பார்த்து, 'எங்கள் ஊர் வழக்கப்படி ஒரு நாள் நிலம் தருகிறோம்' என்றார். 'அப்படியென்றால் என்ன?' என்று வினவினான் குடியானவன். 'அதுவா, நீ இப்பொழுது புறப்பட்டு, எவ்வளவு தூரம் நிலத்தை சுற்றி வருகிறாயோ அந்த நிலமெல்லாம் உனக்கு சொந்தமாகி விடும். ஆனால் இருட்டுவதற்கு முன நீ புறப்பட்ட இடத்தை வந்தடைய வேண்டும். சிறிது தாமதித்தாலும் உனக்கு ஒன்றுமில்லை' என்றார். . அதிசயமான இந்த முறை அவன் ஆசையை தூண்டி விட்டது. சரியென்று வேட்டியை வரிந்துக் கட்டிக்கொண்டு அவன் ஓட ஆரம்பித்தான். ஆகா! ஒரு அழகிய மாந்தோப்பு, இது கிடைத்தால் எவ்வளவு நலம் என்று அதையும் சுற்றி ஓடினான். கொஞ்ச தூரத்தில் ஓரு பூந்தோப்பு, அருகில் பளிங்கு போன்ற நீர் ஓடும் ஆறு, அதையும் சுற்றி வளைத்துக் கொண்டான். துரவு வயல் என கண்ணில்பட்ட எதையும் விடாமல் சுற்றினான். 'ஆயிரம் ரூபாய்க்கு எவ்வளவு இலாபம்? இந்த ஊர்க்காரர்கள் எத்தனை முட்டாள்கள்?' என எண்ணியபடி ஓடினான். இருட்ட ஆரம்பித்தது. . நிபந்தனை நினைவுக்கு வர தான் கிளம்பின இடத்தை நோக்கி விரைந்தான். கால்கள் தடுமாறின. இதயதுடிப்பு தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. வியர்த்து ஊற்றியது. நா வறண்டது. கண்கள் ஒளி மங்கின. தள்ளாடினவனாக எப்படியோ இடத்தை வந்து சேர்ந்தான். ஊர்மக்கள் அவனை கரம் தட்டி வரவேற்றனர். சில நொடிக்குள் சாய்ந்து விழுந்தான். விழுந்தவன் எழுந்தரிக்கவே இல்லை. 'இனி ஆறடி நிலம்தான் தேவை அவனை புதைக்க' என்றார் ஊர்த்தலைவர். அந்த குடியானவன் தான் ஆசைப்பட்ட அனைத்தையும் தனக்கு சொந்தமாக்கினான். ஆனால் தன் உயிரையோ இழந்து விட்டான். . நம்மில் அநேகரின் ஓட்டம் இப்படித்தான் இருக்கிறது. எதிர்காலத்திற்காக சேமிப்பு, பிள்ளைகளுக்காக ஓவர் டைம் சம்பாத்தியம், ஞாயிற்றுக் கிழமைக்கூட கர்த்தரோடு, குடும்பத்தோடு செலவழிக்க மனமில்லை. ஜெபிப்பதற்கு, வேதம் வாசிக்க நேரம் செலவிடுவதில்லை. அவர்களது ஒரே நோக்கம் சம்பாதிப்பது. ஆலயம் செல்பவர்களையும், ஜெபிப்பவர்களையும் ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபடுகிறவர்களையும் காணும்போது பிழைக்கத் தெரியாத முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர். . கை நிறைய சம்பாத்தியம் உள்ளது, ஆனால் உள்ளத்திலோ கவலை, பிள்ளைகள் மனம் போன போக்கில் வளர்ந்ததால் அவர்களைக் குறித்ததான கவலை, தேவ வசனமில்லாத வனாந்தரமான இருதயம் இதனால் என்ன பயன்? பிள்ளைகளோடும், குடும்பத்தோடும் சந்தோஷமாக இருக்க வேண்டிய காலங்களில் உழைத்து, உழைத்து வீணாக்கின நாட்கள் திரும்பவும் நினைத்தாலும் வருமா? . மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? என்று வேதம் எச்சரிக்கிறது. நம் ஆத்துமா விலையேறப்பெற்றது. நம் சரீரத்திற்கென்று எத்தனை முயற்சிகள் எடுத்துக் காத்துக் கொள்கிறோமா அதைப் போன்று ஆத்துமாவையும் காத்துக் கொள்ள வேண்டும். கர்த்தருக்கென்று கொடுக்க வேண்டிய நேரத்தை கர்த்தருக்கும், குடும்பத்திற்கென்று கொடுக்க வேண்டிய நேரத்தை குடும்பத்திற்கும் கொடுக்கவே வேண்டும். . வருடமுழுவதும் சம்பாதித்து விட்டு, குடும்பத்தை இழந்துப் போவோமானால் எத்தனை பரிதாபம்? நம் மனப் போக்கில் வாழ்ந்துவிட்டு, யுகா யுகமாய் கர்த்தரை இழந்துப் போவோமானால் எத்தனை பரிதாபம்? உலக பொருட்களுக்காக, மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டு விடாதிருப்போம். ஆமென் அல்லேலூயா! . வாழ்நாளெல்லாம் வீண்நாளாய் வருத்தத்தோடே கழிப்பது ஏன் வந்தவர் பாதம் சரணடைந்தால் வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார் . அழகும் மாயை நிலைத்திடாதே அதை நம்பாதே மயக்கிடுமே மரணம் ஓர் நாள் சந்திக்குமே மறவாதே உன் ஆண்டவரை . வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை |