நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். - (எபேசியர் 5:30). . 1. கிறிஸ்து தலை, நாம் அவயவங்கள்: . கிறிஸ்துவின் சபையாகிய நாமே அவருடைய சரீரத்தின் அவயவங்களாயிருக்கிறோம். நாம் அநேகராயிருந்தாலும், ஒரே சரீரமாக அழைக்கப்பட்டிருக்கிறோம். சரீரத்தின் ஒவ்வொரு அவயவத்திற்கும் ஒவ்வொரு வேலை இருப்பதுப் போல கிறிஸ்துவின் சபையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை உண்டு. 'ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்' - (ரோமர் 12:4-5) நாம் தலை அல்ல. கிறிஸ்துவே தலையாயிருக்கிறார். ஆகவே தலையாகிய அவர் கட்டளையிடுவதை சரீரமாகிய நாம் செய்ய வேண்டும். . 2. வித்தியாசமான கிருபை வரங்கள்: . ஒவ்வொருவருக்கும் தேவன் அவருடைய சித்தத்தின்படி கிருபையின் வரங்களை கொடுத்திருக்கிறார். 'நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்' - (ரோமர் 12:6-8). . 3. மற்ற அவயவங்களும் முக்கியமானவை: . நாம் ஒரு சபையில் இருந்து கர்த்தருக்கு ஊழியம் செய்வது போல் மற்ற அவயவங்களாக இருப்பவர்களுக்கும் கர்த்தருடைய அழைப்பு உண்டு. ஆகவே, நாம் ஒருவரையொருவர் கனப்படுத்தவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் கடமைப்பட்டுளளோம். 'ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்' - (1கொரிந்தியர் 12:26). . 4. கிறிஸ்துவில் சபை பூரண வளர்ச்சியடைய ஊழியங்கள்: . மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்ப்படுத்தினார். - (எபேசியர் 4:11-13). இந்த ஊழியங்கள் சபையிலிருந்துதான் வெளிப்பட வேண்டும். . 5. பிரிவினைகள் தேவையில்லாதது: . சத்துருவானவன் நாம் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்படாதபடிக்கு, நமக்குள்ளே பிரிவினையின் ஆவியை கொண்டு வருவான். ஆனால் நாம் ஒருமனப்பட்டு, அவனுக்கு எதிர்ந்து நிற்க வேண்டும். 'சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்' - (1 கொரிந்தியர் 1:10) சபையில் ஒரு மனதோடு நாம் தேவனை ஆராதிக்கும்போது, குடும்பங்களில் நாம் ஒருமனதோடு தேவனை ஆராதிக்கும்போது, தேவனுடைய பிரசன்னம் நம் மத்தியில் அளவில்லாமல் இறங்கிவரும்;. தேவன் அந்நேரத்தில் சபையையும் குடும்பத்தையும் அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறார். . 6. கிறிஸ்துவை போல ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்: . நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவான் 13:34) என்ற நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருந்து, பிரதான மேப்பனாகிய இயேசுவின் கட்டளையை நிறைவேற்றுவோம். அதற்காகவே நாம் அழைக்கப்பட்டோம். கிறிஸ்துவின் சரீரமாகிய மணவாட்டி சபையாக அவருடைய வருகைக்கு ஆவலோடு எதிர்கொள்கிறவர்களாக, நமக்குள் இருக்கிற போட்டி பிரிவினைகள் மாறி, நாம் ஒன்றாக தேவ ராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்கள் என்பதை அறிந்து, உணர்ந்து அவருடைய வருகைக்காக காத்திருப்போம். மாரநாதா! இயேசுவே சீக்கிரம் வாரும். . அனுதினமன்னாவை படித்துவிட்டு வெளிநாட்டில் உள்ள சில மேய்ப்பர்கள் தங்கள் சபையில் காணப்படும் பிரச்சனைகளை குறித்து எழுதி அதற்காக ஜெபிக்கும்படி கேட்டிருந்தார்கள். அவர்களின் இருதய பாரத்தை அறிந்த நாங்கள், நேற்றைய தினமும், இன்றும் சபையைக் குறித்து எழுதும்படி பாரப்பட்டோம். மணவாட்டி சபையாகிய நாம், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, கனம் பண்ணுகிறதில் ஒருவரையொருவர் முந்திக் கொள்வோம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். . சபையின் அஸ்திபாரம் நீரே சபையின் தலையானவர் நீரே சபையை போஷித்து காத்தென்றுமே சேர்த்து கொள்ள வருபவர் நீரே . |