அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்றார். - (மத்தேயு 16:24). . பில்லிகிரகாம் இளம் வயது வாலிபனாக இருந்தபோது, தேவனுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உடையவராக இருந்தார். ஒரு நாள் தன் நண்பர்களோஈஷடு கால்பந்தாடச் சென்றார். விளையாடிக் கொண்டிருந்த நேரத்திலும் அவர் உள்ளம் தேவனோடு உறவாடிக் கொண்டிருந்தது. கர்த்தர் பில்லிகிரகாமின் உள்ளத்தில் உலகத்திலுள்ள மற்ற வாலிபர், வயோதிபர், சிறியோர், பெரியோரின் ஆத்தும தேவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். . விளையாட்டு முடிந்தது. நண்பர்கள் எல்லோரும் அவரவர் தம்தம் வீட்டிற்கு சென்று விட்டார்கள். ஆனால் பில்லிகிரகாமோ, அந்த கால்பந்து மைதானத்திலே முழங்கால்படியிட்டார். கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. . 'ஆண்டவரே என்னை நம்பும், என்னை நம்பும், உமது பார்வையிலே என்னை நம்பிக்கைக்குரியவனாக்கும்' என்று கதறினார். அந்த வார்த்தைகளே அவரது ஜெபமாக இருந்தது. அவரது உள்ளம் தேவனிடத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தது, ஏறத்தாழ நான்கு மணி நேரம் மிகுந்த சத்தத்தோடு ஜெபித்தார், 'ஆண்டவரே என்னை நம்பும்' என்பதுதான் அவரது ஜெபமாக இருந்தது. கர்;த்தருடைய ஆவியானவர் வல்லமையாக இறங்கி அவரை அபிஷேகித்தார். அன்றிலிருந்து கர்த்தர் ஒரு பெரிய திருப்பத்தை அவர் வாழ்வில் கட்டளையிட்டார். மாபெரும் விளையாட்டு வீரரான அவரை மாபெரும் சுவிசேஷ வீரனாக மாற்றினார். அல்லேலூயா! . பிரியமானவர்களே, நாம் கர்த்தருடைய நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறோமா? நம் வாழ்வு கர்த்தரை நம்மை நம்பி காரியங்ளை, பொறுப்புக்களை கொடுக்கும் விதத்தில் இருக்கிறதா? எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? பில்லிகிரகாம் கதறினாரே, என்னை நம்பி பொறுப்புக்களை தாரும் என்று. அப்படிப்பட்டதான ஊழிய வாஞ்சை நமது உள்ளத்தில் இருக்கிறதா? . கர்த்தருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்கிற தாகம் நம் இருதயத்தில் இருக்கிறதா? அந்த வாஞ்சை ஆர்வம் நம் உள்ளத்தில் இல்லாவிட்டால் நாம் அனலுமில்லாமல், குளிருமில்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்! . நம்மை நாம் வெறுத்து, சிலுவையை எடுத்துக் கொண்டு, கர்த்தர் சென்ற பாதையில் செல்வோமா? கர்த்தருடைய நம்பிக்கைக்குரியவர்களாக நம் வாழ்வு மாறட்டும்! என்னை நம்பும் என்னை நம்பும் என்று கதறின ஒரு பில்லிகிரகாமை கொண்டு, ஆண்டவர் கோடிக்கணக்கான மக்களுக்கு பிரயோஜனமாக மாற்ற முடியுமென்றால், நம் இருதயத்தின் வாஞ்சை தாகத்தைப் பார்த்து, கர்த்தர் நம்மையும் மற்றவர்களுக்கு பிரயோஜனமாக மாற்றுவது நிச்சயமல்லவா? . நம் நேசருக்காக, நம் கர்த்தருக்காக எதையாவது செய்வோம். அவர் நாமத்தை உயர்த்துவோம். அவருக்காக வாழ்ந்திடுவோம். அவர் புகழ் உயர்த்திடுவோம். ஆமென் அல்லேலூயா! . தள்ளப்பட்ட கல் நான் எடுத்து நிறுத்தினீரே உண்மை உள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரையா . பாலை நிலத்தில் கிடந்தேன் தேடி கண்டு பிடித்தீர் கண்ணின் மணிபோல காத்து வந்தீர் கழுகு போல் சுமக்கின்றீர் . உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா.. நன்றி நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா |