அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். - (யாக்கோபு 1:14-15). . கடலில் உள்ள உப்பு தன்மை சாதாரணமாக ஒரு மனிதன் சாப்பிடும் உப்பின் அளவை விட ஏழு மடங்கு அதிகம். ஒரு மனிதன் கடலில் செல்லும்போது, குடிக்கும் தண்ணீர் இல்லாமல் போய், இந்த தண்ணீரை குடித்தால், பயங்கர உப்பு கரிப்பாக இருக்கும். அதை குடிக்கும்போது, உடலில் தண்ணீர் வற்றிப்போக ஆரம்பிக்கும். ஏனெனில் அதிகமாய் சேர்ந்த உப்பை வெளியேற்ற வேண்டி, கிட்னி உடலில் இருக்கும் தண்ணீரை எடுக்க துவங்கும். அப்போது அந்த மனிதனுக்கு அதிகமாய் தாகமுண்டாகும். கடைசியில் அவன் உடலில் உள்ள தண்ணீரெல்லாம் வற்றி, மரிக்க நேரிடலாம். . அதைப் போலத்தான் பாவமும், அதை இச்சிக்கும்போது, அந்த கடல் தண்ணீரை குடித்த மனிதனைப்போல இன்னும் தண்ணீர் வேண்டும் என தாகம் அதிகமாவது போல பாவம் செய்ய இன்னும் தாகம் உண்டாகிறது. நமக்கு அதுதான் வேண்டும் அதுதான் தேவை என்பதைப் போல பாவத்தின் மேல் ஒரு தாகம் உண்டாகிறது. ஆனால் அது நம் உயிரையும் குடிக்கும். அது நம் உயிரையும் வாங்கும்; என்பதை நாம் உணருவதில்லை. . 'சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்' தேவன் யாரையும் பாவம் செய் என்று சொல்வதில்லை. ஆனால் மனிதனோ தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, பாவம் செய்கிறான். முதலில், இச்சையோடு கண் பார்க்கிறது, அதற்கு பின் அவன் அதை தன் மனதில் கொண்டு வந்து, பல நாட்களாக அதை கற்பனையில் கொண்டுவந்து, பாவத்தை கர்ப்பம் தரித்து, கர்ப்பம் வளருவது போல வளர்க்கிறான். பின் ஒரு நாள் அவன் அந்த பாவத்தில் விழுகிறான். பின் பாவம் செய்து செய்து, அது மரணத்தை பிறப்பிக்கிறது, 'பாவத்தின் சம்பளம் மரணம்' (ரோமர் 7:23) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. . உலகத்தின் இச்சைகள் நம்மை தூண்டுவது இயல்புதான். ஏனெனில் பாவத்தை தூண்டும்படியான பத்திரிக்கைகளும், சினிமாக்களும், அரைகுறை உடைகளோடு நடிகைகள் இருப்பதை தெருவெங்கும் போஸ்டர்களில் ஒட்டி மனிதர்களை பாவம் செய்ய தூண்டும் வகையில் சத்துருவானவன் மனிதர்களை பாவத்திற்கு நேராக இழுக்கிறான். அப்படி அவன் இழுக்கும்போது, யார் அதில் விழாதபடி தங்களை பாதுகாத்து கொள்கிறார்களோ அவர்கள் பாவத்தை ஜெயிப்பார்கள். ஆனால் அதில் விழுந்து போகிறவர்கள்தான், இச்சைக்கு இடம் கொடுத்து, பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். . ஆகவே பாவத்தை தூண்டும் எந்த காரியத்திற்கும் நம்மை ஈடுபடுத்தாமல் நம்மை காத்து கொள்வதே அதற்கு அடிமைகளாகாமல் இருப்பதற்கு உதவும். 'விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்' (மத்தேயு 5:27-30) என்று இயேசுகிறிஸ்து கூறினார். முதலில் கண்களின் பாவ இச்சை தோன்றுகிறது என்று நான் முன்பு கூறினேன். உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும் என்று இயேசுகிறிஸ்து எச்சரிக்கிறார். . இந்த பாவ வழியிலிருந்து தப்புவித்து கொள்ள தேவன் ஒருவழியை வைத்திருக்கிறார். ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்... இச்சகமான வார்த்தைகளைப்பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய் (நீதிமொழிகள் 2:10,11,17). ஞானமாகிய இயேசுகிறிஸ்து உன் இருதயத்தில் பிரவேசிக்க நீ இடம்கொடுக்கும்போது, அவர் தரும் நல் யோசனைகள் பாவ வழிகளுக்கு உன்னை தப்புவிக்கும். அவர் உள்ளத்தில் இருக்கும்போது, நீ பாவம் செய்ய முடியாது. அவரை ஏற்றுகொள்வோம். அவருக்கு நம் முழு வாழ்வையும் அர்ப்பணிப்போம். அவர் நம் வாழ்வை நடத்துவார். பாவ இச்சைகளுக்கு நாம் விழாமல் நல் ஆலோசனைகளை தருவார்; ஆமென் அல்லேலூயா! . கள்ளனாயினும் நான் நீர் பெற்ற பிள்ளையல்லோ கள்ளனுக்கருள் செய்த நீர் தள்ளாதீர் சிலுவை நாதா! பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை நின் கிருபை பிரவாகத்தால் ஏற்றிடும் இயேசுநாதா! .
|