இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். - (லூக்கா 23:28). . நம் தேவன் குடும்பத்தை உருவாக்கினவர், குடும்பத்தை நேசிப்பவர். குடும்பமாக தேவனை ஆராதிப்பது தேவனுடைய சித்தமும், திட்டமுமாகும். பிள்ளைகள் தேவனுடைய ஈவாக இருக்கிறார்கள். பெற்றோர்களை விட தேவன் நம் பிள்ளைகள் மேல் அதிக கரிசனை உடையவராக இருக்கிறார். . இயேசுகிறிஸ்து தமக்கு பின் வந்த திரளான கூட்டத்தை பார்த்து, ஒரு சிறு பிள்ளையை தூக்கி, நீங்கள் மனம் திரும்பி பிள்ளைகளை போலாகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று பிள்ளைகளை எடுத்துக் காட்டாக நிறுத்தினார். . வேதத்திலே பிள்ளைகள் மூலம் நடந்த அற்புதங்கள், பிள்ளைகள் பெற்ற சுகம், பெற்றோருக்கு எப்படி தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்கிற ஆலோசனைகளை குறித்து நாம் வாசிக்கிறோம். உதாரணத்திற்கு, ஐந்து அப்பம், இரண்டு மீன்களை தன்னலமாக தன்னோடு வைத்துக் கொள்ளாமல், கர்த்தரிடம் கொடுத்த போது, அது ஐயாயிரம் பேருக்கு மேல் சாப்பிடும்படியாக ஆசீர்வதிக்கப்பட்டது, யவீருவின் மகள் உயிரோடு எழுப்பப்பட்டது, சிம்சோனை எப்படி வளர்க்க வேண்டும் என்று அவருடைய பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் என்று சொல்லி கொண்டே போகலாம். . தேவன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறவர். வேதத்தில் அப்படி ஜெபித்த அநேகரை குறித்து நாம் பார்க்க முடியும். தண்ணீரின்றி தன் பிள்ளை சாவதை பார்க்க முடியாமல் கதறிய ஆகார், தன் வயிற்றிலிருந்த இரட்டை பிள்ளைகளை குறித்து தேவனிடம் விசாரித்த ரெபேக்காள், தன் பிள்ளைகளை ஆசீர்வதித்த யாக்கோபு, பிறக்க போகிற பிள்ளையை வளர்க்க கற்று கொடுக்கும்படி ஜெபித்த மனோவா, மலடியான தனக்கு பிள்ளை வேண்டி கண்ணீர் வடித்த அன்னாள், தன் பிள்ளையின் உயிருக்காக உபவாசித்து இராமுழுவதும் தரையிலே விழுந்த கிடந்த தாவீது, தன்னுடைய பிள்ளைகளின் பாவத்திற்காக சர்வாங்க தகன பலிகளை செலுத்தின யோபு, புதிய ஏற்பாட்டில், பிசாசினால் கொடிய வேதனைப்பட்ட தன் பிள்ளைக்காக நாய்க்குட்டியை போல தன்னை தாழ்தின கானானிய ஸ்திரீ, என்று அநேகரை குறித்து பார்க்கிறோம். . பிரியமானவர்களே நாம் நம் பிள்ளைகளுக்காக ஜெபிக்கின்றோமா? பேருக்கு என் பிள்ளையை ஆசீர்வதியும் என்று சொல்லி, ஒரு வரியில் ஜெபித்து விட்டு போகின்றோமா? அவர்களின் இரட்சிப்பிற்காக ஜெபிக்கின்றோமா? அவர்களின் சுக வாழ்விற்காக ஜெபிக்கின்றோமா? . வரப்போகிற காலம் மிகவும் கொடுமையாக இருக்க போகிறது. கிறிஸ்தவ பிள்ளைகள் கர்த்தருக்காக எழும்பி நிற்க முடியாதபடி அவர்களை துன்புறுத்தப்படும் காலங்கள் வரலாம். ஆனால் அவர்கள் விசுவாசத்தில் வழுவி போய் விடாதபடி நாம் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். கர்த்தரை மாத்திரம் அவர்கள் உறுதியாக சிறுவயதிலிருந்தே பிடித்து கொண்டால் என்ன தான் சூழ்நிலைகள் வந்தாலும் அவர்கள் அந்த விசுவாசத்திலிருந்து மாற மாட்டார்கள் என்பது உறுதி. . அதற்காக நாம் அவர்களை சிறுவயதிலிருந்தே கர்த்தருக்குள் வளரும்படி நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். ஜெபிக்கவும், வேதம் வாசிக்கவும் கற்று தரவேண்டும். அதற்கு நாம் அவர்கள் முன்பாக ஜெபிக்கவும், வேதம் வாசிக்கவும் வேண்டும். நாம் செய்யாவிட்டால் நம் பிள்ளைகள் ஆயிரம் முறை வேதத்தை படி என்று சொன்னாலும் செய்ய மாட்டார்கள். . சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை கர்த்தருக்குள் வாழும்படி பழக்கி விட்டால் அவர்கள் வாலிபர்களாகும்போது, கர்த்தருக்குள் உறுதியாக இருப்பார்கள். நாம் அவர்களுக்காக மற்றவர்களிடம் என் பிள்ளைக்காக ஜெபியுங்கள், அவர்களுடைய இரட்சிப்பிற்காக ஜெபியுங்கள் என்று கண்ணீர் விட வேண்டியதில்லை. . சிறுவயதில் பிள்ளைகள் தங்களை போன்ற பிள்ளைகளோடு என்ன பேசுகிறார்கள், அசுத்தமான வார்த்தைகள் பேசுகிறார்களா? என்றெல்லாம் நாம் கவனிக்க வேண்டும். சில பிள்ளைகளின் வாயில் பொய்யும், கெட்ட வார்த்தையும் சரளமாக புறப்பட்டு வரும். அவற்றை ஆரம்பத்திலேயே கண்டிக்காவிட்டால், பின்னால் வருத்தப்பட வேண்டி வரும். வீட்டில் பெற்றோர் கெட்ட வார்த்தை பேசினால், பிள்ளை சீக்கிரம் கற்று கொண்டு அதே வார்த்தையை வெளியில் பேசும். ஆகையால் பிள்ளைகள் முன்பு என்ன பேசுகிறோம் என்பதை குறித்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். . கர்த்தருக்குள் வளருகிற பிள்ளைகள் பெற்றோர் சொல்லாமலேயே அருமையான காரியங்கள் செய்வது உண்டு. எனக்கு தெரிந்த அருமையான ஊழியரின் மகள், தனக்கு கிடைக்கும் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் போன்ற பாக்கெட் மணியை சேர்த்து வைத்து, ஒரு குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும், அந்த பணத்தில் வேதாகமத்தை வாங்கி, பக்கத்தில் உள்ள புறமத பிள்ளைகளுக்கு கொடுத்தாள். இத்தனைக்கும் அந்த குடும்பம் பணக்கார குடும்பமும் இல்லை. ஆனால் கர்த்தருடைய ஊழியத்தை உண்மையாக குடும்பமாக செய்கிறவர்கள். பெற்றோர் கர்த்தருக்காக செய்கிற காரியங்களை பார்த்து பிள்ளை தானாக கர்த்தருக்காக தன் சிறுவயதிலேயே நிற்க ஆரம்பித்து விட்டாள். . சிறுவயதிலிருந்தே நம் பிள்ளைகளை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து. கர்த்தருக்குள் வளர்ப்போம், நாமும் சாட்சியின் ஜீவியத்தை செய்வோம். அதை காணும் பிள்ளைகள் அவர்களும் கர்த்தருக்கும் வளருவார்கள். கர்த்தருக்கென்று சாட்சியாக ஜீவிப்பார்கள். ஆமென் அல்லேலூயா! . இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு . உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழை இல்லை பணக்காரன் இல்லை . இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் . இன்பம் உண்டு சமாதானம் உண்டு வெற்றி உண்டு துதிப்பாடல் உண்டு . இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஈந்திடுவார் |