அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. - (நீதிமொழிகள் 16:18). . நமக்கு எல்லாருக்கும் தெரிந்த ஒரு கதையை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஒரு தவளைக்கு தத்தி தத்தி குதித்து போரடித்து விட்டது. அதனால் அது பறக்க விரும்பியது. அதற்காக என்ன செய்வது என்று யோசித்து யோசித்து பார்த்தது. . கடைசியில் ஒரு திட்டம் தீட்டியது. அதன்படி அது பறப்பதற்கு இரண்டு பறவை நண்பர்கள் தேவை. ஆகையால் அது தன் இரண்டு பறவை நண்பர்களிடம் ஒரு கம்பை கொடுத்து, இரண்டு பக்கமும் அந்த கம்பை அந்த பறவைகள் கவ்வி கொள்ள இந்த தவளை நடுவில் அந்த கம்பை தன் வாயால் கவ்வி கொண்டு, உயர பறக்க வேண்டும். இதுதான் அந்த தவளையின் திட்டம்! . அதன்படியே செய்து, இப்போது தவளை பறக்க ஆரம்பித்து விட்டது! ஆஹா! என்ன ஒரு அற்புதம்! நானும் வானில் பறக்க ஆரம்பித்து விட்டேனே என்று மகிழ்ச்சியோடு அது பறந்து கொண்டிருந்தது. . கீழே தவளையோடு இருந்த மற்ற தவளை நண்பர்கள் பறந்து கொண்டிருந்த தவளையை பார்த்து, ஆச்சரியப்பட்டு, ஆஹா தவளை பறக்கிறது என்று சத்தமிட்டார்கள். அதை கேட்டு தவளை பெருமிதத்தோடு பறந்து கொண்டிருந்தது. . மற்ற தவளைகள் 'இந்த ஐடியாவை கொடுத்தது யாராயிருக்கும்? அந்த பறவைகளாகத்தான் இருக்க வேண்டும்! ஏனெனில் அவைதான் வானில் எப்போதும் பறந்து கொண்டிருக்கின்றன. ஆகவே அவைதான் இந்த அற்புத ஐடியாவை கொடுத்திருக்க வேண்டும்' என்று பறவைகளை புகழ்ந்து பேச ஆரம்பித்தனர். . அதை கேட்ட தவளைக்கு முதலில் தான் பறக்கிறோம் என்கிற அந்த மகிழ்ச்சி மறைய ஆரம்பித்தது. 'அது ஒன்றும் பறவைகளின் திட்டம் கிடையாது. நான் தானே அதை திட்டமிட்டேன். என்னுடைய திட்டத்தின்படிதானே இப்போது பறக்கிறேன். இவர்கள் எல்லாரும் அது தெரியாமல் பறவைகளை புகழ்ந்து கொண்டிருக்கிறார்களே' என்று வருத்தப்பட ஆரம்பித்தது. . அப்போது கீழே இருந்த மற்ற தவளைகள், 'நீயே சொல், யார் இந்த அற்புத திட்டத்தை கொடுத்தது?, பறவைகள் தானே' என்று கேட்டபோது, அது தான் கவ்வி இருப்பதால்தான் பறந்து கொண்டிருக்கிறேன் என்பதை மறந்து, மற்ற தவளைகள் தன்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்று நினைத்து, 'நான்தான்' என்று சத்தமிட்டது. பின்னர் நடந்தது என்ன என்பது உங்களுக்கே தெரியும்! ஆம், உயரத்தில் இருந்து கீழே விழுந்து மரித்தது! அந்தோ பரிதாபம்! நுணலும் தன் வாயால் கெடும் என்கிற பழமொழி இந்த கதையின் மூலம்தான் வந்திருக்கும் போலிருக்கிறது. . ஆம் பிரியமானவர்களே நம்மிலும் கூட சில வேளைகளில் இந்த பெருமை தலை தூக்க ஆரம்பிக்கிறது. மற்றவர்கள் செய்ய முடியாத ஒரு சில காரியங்களை நாம் செய்யும்போது நம்மையும் அறியாமல் 'இதை செய்தது நான் தானே என்கிற ஒரு பெருமை வருகிறதல்லவா? இதை இத்தனை அருமையாக என்னை விட யாரால் செய்ய முடியும்?' என்கிற எண்ணம் வந்தாலே அது பெருமையாகிறது. பெருமை வர ஆரம்பித்தால் அது வீழ்ச்சிக்கு ஆரம்பம் என்று, விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை என்று வேதம் கூறுகிறது. . வேதத்தில் அநேகர் இந்த பெருமையால் விழுந்து போனார்கள் எனபதை நமக்கு எச்சரிக்கையாக எழுதப்பட்டிருக்கிறது. பரலோகத்தில் தேவனுடைய சமுகத்தில் நின்று துதித்து கொண்டிருந்த லூசிபருக்கு பெருமை வந்தபடியால் அவனோடு கூட மூன்றில் ஒரு பங்கு தூதர்கள் விழுந்து போனார்களே! . ஆமானிடம் பெருமை காணப்பட்டதால் அவன் மொர்தேகாய் தன்னை வணங்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக யூத குலத்தை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஆனால் ஆமான் தானே தாழ்த்தப்பட்டு, அழிந்து போனான். . பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாகிய நேபுகாத்நேச்சார் 'இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று...' (தானியேல் 4:30-31) என்று அவர் தள்ளப்பட்டு, மாடுகளை போல புல்லை மேய்ந்தார் என்று வேதம் கூறுகிறது. . இப்படி பெருமையினிமித்தம் தள்ளப்பட்டு, அழிந்து போனவர்கள் அநேகரை குறித்து நாம் வேதத்தில் பார்க்கிறோம். மட்டுமல்ல, உலக சரித்திரத்திலும் அநேக இராஜாக்களும், மற்றவர்களும் பெருமைக்கு இடம் கொடுத்து அழிந்தார்கள். . தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது (யாக்கோபு 4:6) என்று வாசிக்கிறோம். தேவனே பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்பதால் அந்த பெருமை என்னும் அழிவின் சக்திக்கு நாம் எதிர்த்து நிற்போம். நாம் மற்றவர்கள் செய்ய முடியாத காரியங்களை செய்வோமானால் அதனால் பெருமை படாமல், கர்த்தர் எனக்கு ஞானம் கொடுத்ததால் என்னால் இதை செய்ய முடிந்தது என்று கர்த்தருக்கு கனத்தை செலுத்துவோம். அப்போது இன்னும் காரியங்களை செய்ய கர்த்தர் ஞானத்தை தருவார். . கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்ளும் அநேகருக்கு தங்கள் செல்வாக்கை குறித்து பெருமை, தங்கள் ஜாதியை குறித்து பெருமை, தங்கள் படிப்பை குறித்து பெருமை, தங்கள் வீட்டை குறித்து பெருமை, தங்கள் உடைகளை குறித்து பெருமை, தங்கள் பிள்ளைகளை குறித்து பெருமை என்று எவ்வளவோ பெருமைகளினால் பீடிக்கப்பட்டு, மற்றவர்களை தாழ்வாக நினைத்து, அவர்களை மனநோக செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கர்த்தர் அப்படிப்பட்டவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும், உணர வேண்டும். மாற வேண்டும். . கர்த்தர் நமக்கு ஞானத்தை கொடுக்கும்போது, செல்வாக்கை கொடுக்கும்போது, நல்ல வீடுகளையும், பிள்ளைகளையும், உடைகளையும் கொடுக்கும்போது, அவருக்கே எல்லா கனத்தையும் மகிமையையும் செலுத்துவோம். அவரே அதற்கு தகுதியானவர். நம்மை அவருக்கு முன்பாக தாழ்த்துவோம். அதனால் உயர்த்தப்படுவோம். ஆமென் அல்லேலூயா! . கறையில்லாமலே குற்றமில்லாமலே கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் . நல்ல கனிகொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் . பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும் கோணலானவை நேராகணும் கரடானவை சமமாகணும் . இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம் |