நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும்கொடுப்பேன். - (ஏசாயா 43:4). . ஒருபோதகர் ஒரு 500 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து, தன் சபையில் உள்ளவர்களை பார்த்து, 'யாருக்கு இந்த பணம் வேண்டும்' என்று கேட்டார். 'இதை உங்களில் யாருக்காவது ஒருவருக்கு கொடுக்க போகிறேன், ஆனால் அதற்கு முன் நான் ஒன்று செய்ய போகிறேன்' என்றார். . சபை மக்களெல்லாரும் ஆவலோடு அவரை பார்த்து கொண்டிருக்க, அவர் அந்த நோட்டை எடுத்து, கசக்கிவிட்டு, 'இன்னும் யாருக்காவது இந்த நோட்டு வேண்டுமா' என்று கேட்டார். அப்போதும் மக்கள் கைகளை உயர்த்தினார்கள். அப்போது, அவர் அந்த நோட்டை தன் கால்களில் உள்ள செருப்பால் அதை மிதித்து, அழுக்காக்கி, அதை கசக்கி 'இன்னும் யாருக்காவது இந்த நோட்டு வேண்டுமா' என்று கேட்டார். அப்போதும் மக்கள் கைகளை உயர்த்தினார்கள். . அப்போது அவர் தன் சபை மக்களை நோக்கி, 'என் அருமை கர்த்துருடைய ஜனமே, இன்று ஒரு நல்ல பாடத்தை கற்று கொண்டீர்கள். இந்த 500 ரூபாய் நோட்டு எத்தனை அழுக்கானாலும் அது தன்னுடைய மதிப்பை இழக்கவில்லை. அது எத்தனை கசக்கப்பட்டாலும் அது 500 ரூபாய் மதிப்பானதே. அது அழுக்கானதினால், அதன் மதிப்பு ஒரு நாளும் குறைந்து போக போவதில்லை. . நம் வாழ்விலும், நாம் எத்தனை அழுக்கானவர்களாயிருந்தாலும், நம்முடைய சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நாம் ஒருவருக்கும் பிரயோஜனமில்லாதவர்கள், நாம் மதிக்கப்பட தகுதியற்றவர்கள் என்று நம்மை நாமே தாழ்த்தி கொண்டாலும், கர்த்தருடைய பார்வையில் நாம் என்றும் கனம் பெற்றவர்களே! நாம் அழுக்கானவர்களாயிருந்தாலும் கர்த்தராகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவப்பட்டிருந்தால், நாமும் கர்த்தருடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றவர்களே!' என்று கூறினார். . ஆம்! 'வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்'. - (ஏசாயா1:18) அப்படி நம் பாவங்கள் சிவப்பானதாக, அல்லது இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மாசற்ற, விலைமதிப்பற்ற இரத்தத்தால் கழுவப்படும்போது, அது உறைந்த பனியைப்போலவும், பஞ்சைப்போலவும் ஆகும். அப்படி கழுவப்பட்ட நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள்! . அப்பொழுது கர்த்தர் நம்மை பார்த்து சொல்வார், 'நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும்கொடுப்பேன்' என்று. அந்த 500 ரூபாய் நோட்டு எத்தனை அழுக்காயிருந்தாலும், அதன் மதிப்பு எப்படி குறையாதோ, அதைப்போல நாம் எப்பேற்ப்பட்ட பாவிகளாயிருந்தாலும், நம்முடைய ஆத்துமா விலையேறப்பெற்றதாயிருக்கிறபடியால், அதற்காக தம்முடைய சொந்த இரத்தத்தையே சிந்தி நம்மை விலைகிரயம் கொடுத்து, சத்துருவின் அந்தகார பிடியில் இருந்த நம்மை விடுதலையாக்கி அவருடைய இராஜ்ஜியத்தில் நம்மை சேர்த்த நமது இராஜாதி இராஜாவாகிய இயேசுகிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக! ஆமென் அல்லேலூயா! . விலையேற பெற்ற உம் இரத்தத்தாலே விடுதலை கொடுத்தீர் இராஜாக்களாக லேவியராக உமக்கென தெரிந்து கொண்டீர் மகிமை உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ . |