அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். - (1 யோவான் 3:16,18). . இந்த உலகத்தில் வாழ்கிற நாம் அநேகருக்கு நாமும் இந்த உலகத்தில் ஒரு பிரஜை என்பதுதான் எண்ணம். ஆனால் தேவனுடைய அன்பு நம்மில் இருப்பதால் ஒரு சிலருக்கு நாமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறோம். தேவையுள்ளவர்களுக்கு, காயப்பட்டவர்களுக்கு மற்றும் வேதனையிலிருப்பவர்களுக்கு, நாம் பேசும் ஒரு ஆறுதலான வார்த்தை, நாம் சிந்தும் ஒரு புன்னகை, லேசான தொடுதல், இவை அவர்களுக்கு உலகில் அவர்கள் வாழ்வதற்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கின்றன. போன வாரத்தில் ஒரு சகோதரி புறமதத்தை சேர்ந்தவர்கள், நான் வேலை செய்யும் இடத்தில் தன்னுடைய ஒரு குறையினிமித்தம் வந்திருந்தார்கள். அவர்களோடு நான் பேசும்போது, 'நீங்கள் கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்காக ஜெபிப்பேன்' என்று சொன்னேன். அடுத்த நாள் அவர்களை பார்த்தபோது, நான் சொன்னேன், 'நான் உங்களுக்காக ஜெபித்தேன், நீங்கள் சரியாகி விடுவீர்கள்' என்று அவர்களை சற்று அணைத்தவாறு கூறினேன். உடனே அவாகள் என்னை கட்டியணைத்து முத்தமிட்டு கண்ணீர் வடிக்க தொடங்கினார்கள். மிகவும் நன்றி என்று திரும்ப திரும்ப என்னை முத்தமிட்டார்கள். கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது. நாம் பேசும் ஒரு சிறு ஆறுதலான வார்த்தையும், தொடுதலும், அவர்களுக்கு அத்தனை ஆறுதலை கொண்டு வந்ததை நினைத்தால், அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் என்ற வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. . ஒரு கிறிஸ்தவ சகோதரி, ஒரு மனநோய் இல்லத்தில் வேலை செய்துவந்தார்கள். அவர்கள் நினைத்தார்கள், கர்த்தர் படைத்த எந்த ஒரு சிருஷ்டிக்கும் அன்பு காட்ட வேண்டும் என்று. அவர்கள் வேலை செய்த இடத்தில் ஆனி என்கிற சிறுமி தனியாக ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தாள். இந்த சகோதரி, அந்த சிறுமிக்காக ஜெபித்து கதைகளை சொல்லி தனி பாசம் காட்ட ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் முரட்டாட்டமாக இருந்த அந்த சிறுமி அந்த பாசத்திற்கு கட்டுப்பட ஆரம்பித்தாள். சில மாதங்களில் சரியான அவள், அந்த இடத்திலிருந்து வீட்டுக்கு செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டாள். அவளோ, தனக்கு கிடைத்த அன்பினால் தான் சுகமானதுபோல மற்றவர்களுக்கும் அன்புகூரும் ஒரு வாய்க்காலாக தான் மாற வேண்டும் என்று விரும்பி அங்கேயே இருந்து அநேகருக்கு ஆறுதலாக இருந்து வந்தாள். . சில வருடங்கள் கழித்து, ஹேலன் கெல்லர், அவர்களுக்கு இங்கிலாந்தில், 'அமெரிக்காவின் மிகச்சிறந்த பெண்மணி' என்னும் விருது கொடுக்கப்பட்டது. அப்போது அவர்களிடம், 'உங்கள் குருடு மற்றும் செவிடு என்னும் குறைபாடுகளின் மத்தியிலும் நீங்கள் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன?' என்று கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள், 'ஆனி சுலைவான் மாத்திரம் இல்லையென்றால், நானும் இங்கு இல்லை' என்று கூறினார்கள். அந்த ஆனி சுலைவான் வேறு யாருமில்லை, ஹெலன் கெல்லருக்கு துணையாக அவர்களுக்கு செவியாக, பார்வையாக கூடவே இருந்து, ஒரு ஆசிரியைiயாக, வழிகாட்டியாக இருந்து அன்பு செலுத்தி, அவர்களை உருவாக்கினது, அந்த சிறுமி ஆனியாக இருந்த அந்த பெண்ணே! . இந்த உலகத்திற்கு அந்த கிறிஸ்தவ பெண் ஒரு பொருட்டல்ல, அவர்கள் ஒரு மனுஷி மாத்திரமே, ஆனால் ஆனிக்கு அவர்கள் உலகமாயிருந்து, அவர்களை மீட்டெடுத்தவர்கள், அதுப்போல ஹெலன் கெல்லருக்கு ஆனியே உலகமாக இருந்து அவர்களுக்கு விழியாக ஒலியாக இருந்து அவர்களை உயர்த்தினார்கள். . ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், நான் யாருக்கும் பிரயோஜனமில்லாதவன் என்று. நீங்கள் செய்யும் காரியங்களை மற்றவர்கள் குறைவாக பேசலாம், ஆனால் ஒரு சிலருக்கு நீங்கள் தான் உலகம் என்பதை மறந்து போகாதீர்கள்! கர்த்தருடைய அன்பு உங்களுக்குள் விதைக்கப்பட்டிருந்தால், நீங்கள் அன்போடு செய்யும் ஒவ்வொரு செய்கையும் நிச்சயமாக ஒரு சிலருக்கு மிகவும் தேவையாகவும், உலகமாகவும் இருக்க முடியும்! இன்று நம்முடைய ஆறுதலான ஒரு வார்த்தை ஒரு ஆத்துமாவிற்காகிலும் ஆறுதலை கொண்டு வரட்டும், கண்ணீரை துடைக்கட்டும், நமது புன்னகை அவர்களுக்கு வாழ்வில் ஒரு புது நம்பிக்கையை கொடுக்கட்டும்! நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசியாத இந்த உலகத்தார் அவரும் ஒரு Avatar (ஒரு சகோதரன் எழுதியிருந்தார்) என்று நினைக்கலாம். ஆனால் அவரே நமக்கு ஜீவனாக, நமது வாழ்வாக, சுவாசமாக, உயிராக இருக்கிறார். அவரை விசுவாசிக்கிற நாம் அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். ஆமென் அலலேலூயா! . மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் இராஜ பாதையை செவ்வையாக்குவோம் நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வராரே அதி வேகமாய் செயல்படுவோம் . |