ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான். - நீதிமொழிகள் 13:1. . ஒரு பென்சிலும், ஒரு இரப்பரும் பின்வருமாறு பேசிக் கொண்டதாம்: . பென்சில்: என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். . இரப்பர்: ஏன்? ஏதற்காக? நீ ஒன்றும் தவறு செய்யவில்லையே? . பென்சில்: ஏனென்றால் என்னால் நீங்கள் அடிபடுகிறீர்கள். நான் ஒவ்வொரு முறை தவறு செய்யும்போதும், நீங்கள் அதை திருத்தும்படி அழிக்கும்போது உங்களை சிறிது சிறிதாக இழக்கிறீர்கள். என்னால் தானே அப்படி ஆகிறது . இரப்பர்: உண்மைதான், ஆனால் அதற்காக நான் கவலைப்படவில்லை. தவறுகளை திருத்துவதற்காகத்தானே நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன். நான் முற்றிலும் அழிந்து நீ வேறு ஒரு இரப்பரை வாங்கி பயன்படுத்தினாலும் நான் அதற்காக வருத்தப்பட மாட்டேன். ஏனென்றால் நீ செய்யும் தவறுகளை திருத்தவே நான் பிறந்திருக்கிறேன். அதனால் நீ கவலைப்படாதே என்று பேசி கொண்டதாம். . பெற்றோர்களை இரப்பர்களாகவும், பிள்ளைகளை பென்சில்களாகவும் நாம் எடுத்து கொண்டோமானால், பெற்றோர் எப்போதும் தங்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளை திருத்தும்படியாக இருக்கிறார்கள். அவர்கள் வயதாகி, மெதுவாக அழிக்கப்பட்டு போனாலும், தாங்கள் தங்கள் பிள்ளைகளை சரியாக வளர்த்திருக்கிறோம் என்கிற திருப்தி காணப்படுமேயானால், அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு ஏற்ற பலனை பெற்று கொண்டவர்களாக இருக்கிறார்கள். . நாம் சிறுவயதில் நம் பெற்றோர்கள், நம்மை கண்டித்து, தண்டித்து, நம்முடைய தவறுகளை சரிசெய்ததை நினைத்து பார்த்தால், அவர்கள் ஒரு வேளை நம்மை தண்டியாமல் போயிருந்தால், நாம் இந்த உலகத்திற்குரியவர்களாக போயிருக்க கூடும். கர்;த்தருக்கு பயந்து, அவருடைய வழியில் நடக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையும் கர்த்தருக்கு ஏற்ற வழியில் நடத்துவார்களானால், அந்த பிள்ளைகள் கர்த்தருக்கு கனி கொடுக்கிறவர்களாக மாறும்போது அதை காணும் பெற்றோருக்கு எத்தனை மகிழ்ச்சியாயிருக்கும்! . அநேக ஊழியர் சொல்வதை கேட்டிருக்கிறேன், என் பெற்றோருடைய ஜெபத்தினால் தான் நான் இப்படி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்று. அதன்படியே அவர்களும் தங்கள் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமானால், அவர்கள் பெற்றோர் செய்த காரியத்தை இவர்களும் செய்ய வேண்டும். ஜெபிக்க வேண்டும், வேதம் வாசிக்க கற்று கொடுக்க வேண்டும், ஜெபிக்க கற்று கொடுக்க வேண்டும். பெரியவர்களை மதிக்க கற்று கொடுக்க வேண்டும். பெரியவர்கள் சொன்னால் அதற்கு கீழ்ப்படிய வேண்டும் என்று கற்று கொடுக்க வேண்டும். . 'ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரிகாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்' என்ற வசனத்தின்படி பெற்றோர் சொல்லும் போதகங்களுக்கு செவி கொடுக்கிற பிள்ளைகளும் இருக்கிறார்கள், செவி கொடாமல் பரியாசக்காரர்களாய் இருக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். பரியாசக்காரர்களாய் இருக்கும் பிள்ளைகளுக்காக நாம் கர்த்தரிடம் மன்றாடி ஜெபித்து அவர்கள் நல்ல பிள்ளைகளாக மாற வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். . நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களை இரப்பரை போல தேய்ந்து போன, போய் கொண்டிருக்கிற பெற்றோர்களுக்காக நன்றி செலுத்துவோம். நாமும் அவர்களை போல நம் பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். கர்த்தருக்கு முன்பாக அவர்களை நல் வழியில் நடத்துவோம். அப்பொழுது அவர்கள் நம்முடைய பந்தியை சுற்றிலும் ஒலிவ மரக்கன்றுகளை போலிருப்பார்கள். ஆமென் அல்லேலூயா! . மனைவி கனிதரும் திராட்சைச் செடி பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல் இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள் இடைவிடாமல் ஜெபிப்பார்கள் . கர்த்தரை நேசித்து அவர் வழியில் நடக்கும் மனிதர் பேறுபெற்றோர் உழைப்பின் பயனை உண்பார்கள் நன்மையும் நலமும் பெறுவார்கள் . கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள் |