ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை -(கலாத்தியர் 5:22-23). . வேதத்தில் ஆவியின் கனி என்று ஒருமையில் சொல்லிவிட்டு, அதன்பின் ஒன்பது குணாதிசயங்களைக் குறித்து இந்த வசனம் விவரிக்கிறது. ஒரு கனியில் எப்படி இத்தனை கனிகள் இருக்க முடியும்? ஒரு ஆரஞ்சு சுளைக்குள் சுளைகள் இருப்பதுப் போல ஒரு பழத்திற்குள் இருக்கும் சுளைகளாக இந்த குணாதிசயங்கள் காணப்படுகிறது. . இதை கொடுப்பவர் ஒரே ஆவியானவர். அவர் ஆவிக்குரிய கனியை ஒருபுறமும், ஆவிக்குரிய வரங்களை ஒருபுறமும் கொடுக்கிறார். ஒரு பறவை பறப்பதற்கு எப்படி இரண்டு இறக்கைகள் தேவைப்படுகிறதோ அதுப்போல ஒரு பக்கம், ஆவியின் கனியும், மறுபுறம் ஆவியின் வரங்களும் நாம் கர்த்தருக்குள் வளர, அவரோடு உயர்ந்த அனுபவத்திற்குள் பறப்பதற்கு தேவையாக இருக்கிறது. . சிலருடைய வாழ்க்கையில் இயற்கையாகவே ஆவியின் கனி காணப்படலாம். மற்ற மதத்தினவரிடமும் இதுப் போன்ற கனி காணப்படலாம். ஆனால் ஆவியின் கனி என்பது பரிசுத்த ஆவியானர் நம்மில் ஊற்றப்பட்டு, கனிகளே இல்லாத ஒருவரின் வாழ்வில் இந்த ஒன்பது குணாதிசயங்களையும் வெளிப்படுவதே ஆகும். . அநேகர் சாட்சி சொல்வதைக் கேட்டிருக்கிறேன். 'நான் வாலிப வயது வரை என் விருப்பம் போல நடந்தேன், ஒரு நாள் கர்த்தர் என்னை சந்தித்தார். அவருடைய பிள்ளையாய் என்னை மாற்றினார். அவர் என்னுள்ளத்தில் வந்தப்பின்பு என்னுடைய சுபாவம் மாறிற்று, கர்த்தருடைய குணாதிசயங்கள் என்னில் நிரம்பி, மற்றவர்களுக்கு அவற்றை வெளிப்படுத்த தேவன் கிருபை செய்தார்' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆம், ஆவியானவர் நமக்குள் வரும்போது, நம்முடைய மாம்ச சுபாவங்களும், மாம்ச கிரியைகளும் அழிந்து, கர்த்தருடைய சுபாவங்களும், ஆவியானவரின் கிரியைகளும் நமக்குள்ளிருந்து வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அப்படி வெளிப்படவில்லை என்றால் நம்முடைய இரட்சிப்பு சந்தேகத்திற்குரியதே! . '...நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்' (யோவான் 15:16) என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? ஆம் நாம் கனி கொடுக்க வேண்டும் என்றே தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். நம்மிடத்தில் தேவன் வந்து பார்க்கும்போது கனி இல்லாதிருந்தால் நம் நிலை பரிதாபத்திற்குரியதே! . சில நேரங்களில் 'என் கணவர் இப்படி இருக்கிறார், என் மனைவி இப்படி இருக்கிறாள், அவளிடத்தில், அவரிடத்தில் என் கனியை காட்டுவது என்பது ஒருபோதும் நடக்காத காரியம்' என்று நாம் நினைக்கிறோம். நாம் அந்த இடத்தில் கனிக் கொடுக்க வேண்டும் என்றே தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். வேறு சிலர் 'நான் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்கள் மிகவும் மோசமானவர்கள். அவர்களுக்கு என் கனியை நான் வெளிப்படுத்த முடியாது. அப்படி வெளிப்படுத்தினாலும் எல்லாமே வீண், அவர்கள் அதை புரிந்துக் கொள்ள மாட்டார்கள்' என்று நினைக்கிறோம். அவர்கள் மத்தியில் நாம் கொடுக்கும் கனியே மிகவும் சிறந்தது. அந்த கனியே பலன் கொடுக்கக்கூடியது. . தேவன் நம்மை ஏற்படுத்தினதின் ஒரு காரணம் நாம் கனிகொடுக்கும்படிககும், அது நிலைத்திருக்கும்படிக்கும் என்று நாம் அறிந்துக் கொண்டோம். அதினால் அது எத்தனை முக்கியமானது என்றும் அறிவோம். ஆகையால் நாளையிலிருந்து ஆவியின் கனியாகிய ஒன்பது பலரச, பரவச சுவைகளால் நிரம்பியிருக்கும் சுளைகளை ஒவ்வொரு நாளும் ஒரு சுளையாக அனுதின மன்னாவில் ருசித்துப் பார்த்து, நம் வாழ்வில் அந்த சுவையான சுளைகள் இருக்கிறதா என்று சோதித்து, கனி கொடுக்கிறவர்களாக நாம் மாறுவோமாக! ஆமென் அல்லேலூயா! . அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் நீடிய பொறுமை, தயவு விசுவாசம், நற்குணம், சாந்தம் இச்சையடக்கம் தாருமையா . ஆவியான எங்கள் அன்பு தெய்வமே அடியோரை ஆட்கொண்டு நடத்துமே ஆட்கொண்டு எங்களை அனலாக்கும் அன்பினால் இன்று அலங்கரியும் |