தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார் என்றான். - (2 சாமுவேல் 23:15). . தாவீது இராஜாவின் சொந்த ஊர், பிறந்த வளர்ந்த ஊரும் பெத்லகேமாகும். சிறுவனாக இருந்தபோது, அங்கு இருந்த கிணற்றின் தண்ணீரை அவர் வாஞ்சித்து குடித்திருப்பார். அவர் ஒரு இடையனாக இருந்தபடியால், தன் ஆடுகளுக்கு அங்கிருந்து தண்ணீரை மொண்டு ஆடுகள் குடிக்கும்படியாக ஊற்றியிருப்பார். . அவர் கோலியாத்தை கொன்று, வெற்றியை இஸ்ரவேலருக்கு பெற்றுக் கொடுத்தப்பின்பு அவருடைய வாழ்வு மாறியது. இஸ்ரவேலின் இராஜாவாகிய சவுலுக்கு மருமகனாக மாறினபோது, அவர் நிலைமை மாறியது. ஆனால் சவுல் அவர்மீது பொறாமை கொண்டு, அவரை துரத்த ஆரம்பித்தபோது, அவர் வனாந்திரம், காடு, மேடு, நாடு என்று அலைய துவங்கினார். அந்த சமயத்தில் அவருக்கு தன் சிறுவயதில் பெத்லகேமில் இருந்த கிணற்றின் நீர் ஞாபகம் வந்தது. . நான் சிறு வயதில் பிறந்து வளர்ந்த இடமாகிய சேலத்தை காண வேண்டும் என்கிற வாஞ்சை ஒரு முறை எனக்குள் அதிகமாக எழும்பியது. அதை பார்த்தே ஆகவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். நான் படித்த பள்ளி, சென்ற ஆலயம், நான் சென்று வருகிற வழிதடங்கள் யாவையும் காண வேண்டும் என்கிற ஆசை தணியாததாக இருந்தது. . அதைப்போல தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார் என்றான். அந்த ஆசை அளவுக்கு அதிகமாக இருந்தபடியால்தான், யாராவது அங்குப் போய் அந்த தண்ணீரை கொண்டுவரமுடியுமா என்று கேட்டார். உடனே தாவீதிடம் இருந்த பராக்கிரமசாலிகளில் மூன்று பேர் போய், அங்கு இருந்த பெலிஸ்தரின் தாணைத்தையும் பொருட்படுத்தாமல், தங்கள் உயிரை பணயம் வைத்து, அங்கிருந்து தண்ணீரை கொண்டு வந்து தாவீது இராஜாவிடம் கொடுத்தனர். . 'ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்' (2 இராஜாக்கள் 23:16-17). அந்த மூன்று பேரும் பெத்லகேம் கிணற்றின் நீரை கொடுத்தபோது, தாவீது எப்படி மகிழ்ந்திருப்பார்? ஆசை ஆசையாய் அதை வாங்கிப் பார்த்திருப்பார். ஆனாலும் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்த வீரர்கள் கொண்டு வந்தபடியால் அந்த நீரை தான் குடிக்க தகுதியற்றவன், அது கர்த்தருக்கே உரியது என்று சொல்லி, அதை தரையிலே ஊற்றிவிட்டார். எப்படிப்பட்ட உயரிய எண்ணம் உடையவர் இந்த தாவீது! . ஆயிரம் வருடங்கள் கழித்து அதே பெத்லகேமில் இன்னொருவர் பிறந்தார். ஒருவேளை பெத்லகேமிலிருந்த கிணற்றின் நீர் வற்றிப் போயிருக்கலாம், ஆனால் வற்றாத நீரூற்றாக, அவரிடம் வாங்கிக் குடிப்பவர்களுக்கு ஜீவ நீரூற்றாக இயேசுகிறிஸ்து அங்கு பிறந்தார். அவரிடமிருந்து எடுத்துக் கொள்பவர்களை தடுக்க பெலிஸ்தியர் யாரும் கிடையாது. இலவசமாக, பரிசுத்தமான, ஆத்துமாவை திருப்தி செய்யும்படியான ஜீவத்தண்ணீர் வேறு எங்கும் கிடைக்காது. அவரிடமிருந்து தண்ணீரை குடிப்பவர்களுக்கு வேறு இடத்தில் சென்று தாகம் தீர்க்க வேண்டிய அவசியமும் இராது. அவரே நம் தாகத்தை தீர்ப்பவர். அல்லேலூயா! . நாம் பெற்றுக் கொண்ட ஜீவ நீரூற்றை நமக்கு மாத்திரம் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்போம். அந்த மூன்று பராக்கிரமசாலிகளைப் பார்ப்போம் என்றால், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், அவர்கள் வேறு ஒருவருக்காக அவர் மேல் வைத்த அன்பினால் கொண்டு வந்தார்கள். . இந்த உலகில் அநேக தாவீதுக்கள் இருக்கிறார்கள். நான் தாகமாயிருக்கிறேன் என்று அவர்களையும் அறியாமல் ஜீவத்தண்ணீரைக் கொடுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை வாஞ்சிக்கிறார்கள். அவர்களுக்கு கர்த்தர் கொடுக்கும் இலசவமான ஜீவத்தண்ணீரை கொடுக்க முன்வருவோமா? ஆந்த மூன்று பராக்கிரமசாலிகளைப் போல கர்த்தர் மேல் நாம் வைத்திருக்கும் அன்பினால், நம் வசதிகளையும், நம் இன்பங்களையும், நம் சுய விருப்பங்களையும் கடந்து, அவர் தரும் இலவசமான இரட்சிப்பை நற்செய்தியாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வோமா? ஆத்துமாக்களின் மேல் பாரம் கொண்டவர்களாக, நம் இரட்சகரின் தாகத்தை தீர்க்கும்படியாக அவரிடத்தில் ஆத்துமாக்களை கொண்டு வருவோமா? ஆமென் அல்லேலூயா! . தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் ஊற்றும் ஐயா உம் வல்லமையை தாகத்தோடு காத்திருக்கிறேன் - நான் . நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும் . மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே |