'அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டு வரச்சொன்னான்: அது ராஜ சமுகத்தில் வாசிக்கப்பட்டது'. - (எஸ்தர் 6:1). . எத்தனை ஆச்சரியம்! அதே நாள் சாயங்காலத்தில் வஞ்சகனான ஆமான் மொர்தெகாயை தூக்கில் போடும்படியாக ஐம்பது முழம் உயரமான தூக்குமரத்தை செய்தான். அடுத்த நாள் காலையிலே இராஜாவிடம் சொல்லி அவனை தூக்கில் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் அந்த தூக்கு மரத்தை செய்வித்தான் (எஸ்தர் 5:14). ஆனால் தேவன் அதே இரவிலே எல்லாவற்றையும் மாற்றி போட்டார். . கர்த்தருடைய வேளையை பாருங்கள், ஆமான் நினைத்திருப்பான், யாரும் தன் திட்டத்தை மாற்ற முடியாது, ராஜாவும் அரண்மனை கொலு மண்டபத்தில் இல்லை, தான் செய்த திட்டத்தை யாரும் அறிய முடியாது, நான் காலையில் போய் என் திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று நினைத்தவனாக அவன் அந்த இரவை கழித்திருப்பான், ஆனால் அந்த ஒரு இரவிற்குள்ளாக தேவன் எல்லாவற்றையும் மாற்றி போட்டார். . தேவன் எல்லாவற்றையும் அறிந்தவர். ராஜாவுக்கு ஆமானின் திட்டமும், தூக்கு மரம் செய்ததும் தெரியாது, இராஜாத்தி எஸ்தருக்கும் தெரியாது, ஏன் மொர்தெகாயுக்கும் தெரியாது, ஆனால் தேவனுக்கு முன்பாக மறைந்திருப்பது எதுவுமில்லை. கர்த்தர் செயல்பட ஆரம்பித்தார். நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை நீங்கள் அறியாமலிருக்கலாம், ஆனால் தேவன் அறிந்தவராயிருக்கிறார். அவர் உங்களுக்காக செயல்பட ஆரம்பிப்பார், அவர் உங்களுக்காக யுத்தம் செய்வார். உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் எல்லா காரியத்தையும் அறிந்தவர் அவர். அவர் நம்முடைய வாழ்வில் நடந்த, நிகழ்கின்ற, வருகின்ற முக்காலத்தையும் அறிந்தவர். . கர்த்தருடைய அருமையான செயலை பாருங்கள், அந்த இராத்திரி ராஜாவுக்கு தூக்கத்தை தேவன் வர விடவில்லை, அவனை காலவர்த்தமானங்களின் நடபடியை எடுத்து வர செய்து, படிக்க வைக்கிறார். அது வாசித்தபோது, இரண்டு பிரதானிகளான பிக்தானாவும், தேரேசும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் மேல் கைப்போடப்பார்த்த செய்தியை ராஜாவுக்கு மொர்தெகாய் அறிவித்தான் என்பது வாசிக்கப்பட்டது, அதற்காக மொர்தெகாயுக்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று ராஜா கேட்டபோது, ஒன்றும் செய்யப்படவில்லை என்பதும் ராஜாவுக்கு தெரிய வந்தது. . அடுத்த நாள் காலையில், ஆமான் மொர்தெகாயை தூக்கில் போட வேண்டுமென்று ராஜாவிடத்தில் பேசும்படி முற்றத்திற்கு வந்திருந்தான். ராஜா அவனை உள்ளே அழைத்து, அவன் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக, அவனிடம் 'ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்பட வேண்டும்' என்று அவனிடமே கேட்டு அதன்படியே மொர்தெகாயுக்கு செய்ய சொன்னபோது, அது அவனுடைய வாழ்க்கையின் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. யாரை அவன் தூக்கில் போட வேண்டும் என்று ராஜாவிடம் பேச வந்திருந்தானோ, அதே நபரை நகர வீதியில் எல்லா கனத்தோடும் கனம் பண்ண அவனையே ராஜா செய்ய வைக்கிறார். . தேவன் மொர்தெகாயை தூக்கிலிடாதபடி காத்து, அவனை நகரமே வியக்கும்வண்ணம் கனம் பண்ணினது மாத்திரமல்ல, அவனுக்கு விரோதமாக ஆமான் செய்த தூக்கு மரத்தில் அவனே தூக்கிலிடும்படி செய்கிறார். நம் தேவனுடைய கரங்களில் நம்முடைய காலங்களும் வாழ்க்கையும் இருக்கிறது. . ஒரு வேளை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு விரோதமாக திட்டம் செய்கிறார்களோ? அல்லது உங்கள் குடும்பத்திலேயே உங்களை வெறுத்து உங்களுக்கு விரோதமாக காரியங்களை செய்கிறார்களோ, நீங்கள் தேவனுடைய பிள்ளைகளானால் கலங்க தேவையில்லை, நீங்கள் ஒன்றும் அறியாமல், உறங்கி கொண்டு இருக்கலாம், அவர்களுடைய திட்டங்களைக் குறித்து நீங்கள் அறியாமலிருக்கலாம், ஆனால் எல்லவற்றையும் அறிந்த தேவன் உங்களுக்காக செயல்படுவார், உங்களை காப்பது மாத்திரமல்ல, நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அல்லது, நீங்கள் எந்த இடத்தில் தாழத்தப்பட்டீர்களோ அந்த இடத்தில் உங்களை கனம் பண்ணி, உங்களை உயர்ந்த இடத்தில் வைப்பார். நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. உங்களுக்கு விரோதமாக வருபவர்கள் ஒன்றுமில்லாமற் இல்பொருளாவார்கள், அவர்கள் உங்களுக்கு விரோதமாக செய்யும் ஒரு காரியமும் வாய்காமற் போக செய்ய தேவன் வல்லவராயிருக்கிறார். . இப்படிப்பட்ட அதிசய தேவனை தெய்வமாக கொண்டுள்ள நாம் எத்தனை பாக்கியவான்கள்! ஆகவே எதை குறித்தும் நீங்கள் கலங்காதிருங்கள். கர்த்தரிடத்தில் உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து விட்டு, அவருடைய வேளைக்காக காத்திருங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். தம்மை நம்பி ஜீவிக்கும் உங்களையும் என்னையும் மற்றவர்களுக்கு முன்பாக வெட்கப்படுத்த ஒரு நாளும் தேவன் அனுமதிக்கமாட்டார். அவர் நமக்காக காரியங்களை செய்வார். அவருடைய செயல்கள் மகத்துவமானது, ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார் (யோபு 5: 9-10). ஆமென் அல்லேலூயா! . சிறியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறீர் ஐயா உயர்த்துகிறீர் பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தைப் போல் உன்னை மாற்றிடுவார் உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார் . |