Friends Tamil Chat

புதன், 8 அக்டோபர், 2014

08th October 2014 – தேவனால் பெற்ற அபிஷேகம் - பாகம் - 1

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 அக்டோபர் மாதம் 08-ம் தேதி - புதன் கிழமை
தேவனால் பெற்ற அபிஷேகம் - பாகம் - 1
..........

நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. - (1 யோவான் 2:27).

.

இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்றால் என்ன என்பதை அநேகர் புரியாமலும், குழப்பத்திலும் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் ஆவியானவரின் அபிஷேகத்தை குறித்து என்றுமில்லாத அளவில் பேசப்படுகிறது. அதைக் குறித்து தேவ வார்த்தைகளின் உதவியுடன் நாம் காண்போம்.

.

அபிஷேகம் என்ற வார்த்தை 'எண்ணெய் பூசுதல்' என்ற பொருளில் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஒருவரை ஒரு சிறப்பான பணிக்கு நியமிக்கும்போது அதிகார பூர்வமாக அங்கீகரித்ததற்கு அடையாளமாக எண்ணை பூசப்பட்டது அல்லது எண்ணெய் தலையில் ஊற்றப்பட்டது.

.

ஆசாரியர்கள் அபிஷேகிக்கப்படனர், ராஜாக்கள் அபிஷேகிக்கப்படடனர். தீர்க்கதரிசிகள் அபிஷேகிக்கப்படடனர். இந்த எண்ணெய் அபிஷேகம் புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியின் நிறைவுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிட்ட சிலமக்கள் மேல் வந்து இறங்கினார். ஆனால் இந்த கடைசிக் காலத்தில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று வாக்குதத்தம் செய்த ஆண்டவர், எல்லா மனிதர் மேலும் இன்று ஊற்றிக் கொண்டிருக்கிறார். யோவேல் 2:28,29, ஏசாயா 28:11,12, ஏசாயா 32:15 போன்ற வசனங்கள் அவற்றை நமக்கு தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியிருக்கின்றன.

.

அந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவாக திருச்சபையின் ஆரம்ப நாளான பெந்தேகோஸ்தே என்ற யூத பண்டிகை நாளில் பரிசுத்த ஆவியானவர் இறங்கிவந்;தார். பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள் (அப்போஸ்தலர் 2:1-4).

.

சரி, பரிசுத்த ஆவியானவரின் அப்ஷேகம் எவ்வளவு முக்கியமானது என்றால், உலகமெங்கும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் என்று கட்டளையிட்ட இயேசு தமது அப்போஸ்தல சீடர்களுக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெறாமல் ஊழியத்திற்கு போக வேண்டாம் என்று கட்டளையிட்டார். வெறும் ஆலோசனையாக கூறாமல், கட்டளையிட்டார். 'அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்' (அப்போஸதலர் 1:4,5) முக்கியமில்லாத ஒன்றை பெற இயேசு கட்டளையிடுவாரா? கிறிஸ்தவ வாழ்விற்கும் ஊழியத்திற்கும் இது மிக முக்கியமானது.

.

மனிதனாய் இந்த உலகத்தில் வந்த தேவனாகிய இயேசுகிறிஸ்து தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்று ஜெபம் பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப் போல அவர் மேல் இறங்கினார் (லூக்கா 3:21,22). அவரும் இந்த அனுபவத்தை பெற்றார். அதுமட்டுமல்ல, இயேசுவின் இந்த கட்டளைக்கு கீழ்படிந்து ஜெபித்தவர்கள் யார் யார் என்பது மிக முக்கியமானது. இயேசுவை பெற்றெடுத்த பரிசுத்த தாயாகிய மரியாள்கூட பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை ஜெபித்துதான் பெற்றார்கள். இயேசுவின் சீடர்களும் அந்த அனுபவத்தை பெற்று கொண்டார்கள். அவர்கள் எல்லாருக்கும் அது அவசியமானதாக இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்கும் அது எவ்வளவு அவசியமானது!

.

இரட்சிக்கப்பட்டபோதே பரிசுத்த ஆவியானவர் வந்து விடுகிறார். எனவே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது தனி அனுபவமல்ல என்று கூறுபவர்களும் உண்டு. இந்த கருத்து சரியானதல்ல. இரட்சிப்பு வேறு, பரிசுத்த ஆவியின் ஞானஸநானம் வேறு. இரட்சிக்கப்ட்ட அப்போஸ்தலர், மரியாள் பரிசுத்த ஆவியை பெற்றனர். இரட்சிக்கபபட்ட சமாரியா விசுவாசிகள் பரிசுத்த ஆவியை பெற்றார்கள் (அப்போஸ்தலர் 8:15-17). இரட்சிக்கப்பட்ட எபேசு விசுவாசிகள் பரிசுத்த ஆவியை பெற்றார்கள் (அப்போஸதலர் 19:2). சிலர் இரட்சிக்கப்படடவுடனேயே பரிசுத்த ஆவியினாலும் நிரப்ப்படுகிறார்கள். சிலர் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெற்ற நேரத்திலேயே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுகிறார்கள். ஆனால் இவை தனித்தனி அனுபவங்கள் என்பதை வேத வசனங்கள் திட்டமாய் நமக்கு விளக்குகின்றன. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரை பெறவில்லை. ஏனென்றால் இந்த அனுபவம் இந்த காலத்திற்குரியதல்ல என்ற தவறாக எண்ணுகிறார்கள். இவர்கள் நடத்தும் இறையியல் கல்லூரியில் இவ்விதமாகவே போதிக்கப்படுகிறது, அதிலே படித்து பட்டம்பெற்று வரும் போதகர்களும் அதே கருத்தில் இருப்பதால் அவர்கள் போதனையும் அப்படியே இருக்கிறது. சபை போதகர் எப்படியோ அப்படித்தானே சபை மக்களும் இருப்பார்கள்!

.

இன்று கிறிஸ்தவர்களுக்கே பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொள்வதைப் பறிறி போதிக்க வேண்டியிருக்கிறது. கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தால் தானாகவே கிறிஸ்தவனாகி விடுகிறான் என்ற கருத்து இருப்பதால் அந்த நிலை. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் நமக்கு தேவையற்றது என்று போதிக்கப்படுவதாலும் அநேகர் அதை பெற்று கொள்ள ஆர்வப்படுவதில்லை. அதே சமயம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து பெற்று கொண்டவர்கள் எல்லா சபை பிரிவுகளிலும் இருக்கிறார்கள்.

.

இந்த கட்டுரையை நாம் தொடர்ந்து வரும் நாட்களிலும் காண்போம். இந்த சத்தியம் இந்த நாட்களில் மிகவும் முக்கியமானதாய் இருப்பதால், நாம் தொடர்ந்து அதை குறித்து தியானிக்க போகிறோம். இதை படிக்கும் அநேகருடைய சந்தேகங்கள் நீங்கும் என்பதில் சந்தேகமில்லை. மற்றும் அநேகர் ஆவியானவரின் அபிஷேகத்தை குறித்து கேட்டு எழுதியிருந்தபடியால் இந்த கட்டுரை வெளியாகிறது. கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக. ஆமென் அல்லேலூயா!

.

மாம்சமான யாவர் மேலும்

ஆவியை ஊற்றுவேன் என்றீர்

மூப்பர் வாலிபர் யாவரும்

தீர்க்கதரிசனம் சொல்வாரே

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுடைய பிரயோஜனத்திற்கென்று எங்களை பரிசுத்த ஆவியால் எங்களை நிரப்பி, சத்தியத்தின் பாதையில் வழிநடத்துகிறவரே உம்மை துதிக்கிறோம். இந்த கட்டுரையை படிக்கிற ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்று பரிசுத்த வாழ்க்கை வாழ கிருபை செய்யும். எங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்துகிற பரிசுத்த ஆவியானவருக்காக ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.