உம்மிலே பெலன்கொள்ளுகிறமனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள் - (சங்கீதம் 84:5). . ஒரு காட்டில் உள்ள குகையில் ஒரு கரடி வசித்து வந்தது. அது அந்த காட்டிலேயே மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதை எதிர்த்து வேறு மிருகங்கள் எதுவும் சண்டைக்கு வருவதில்லை. அதனால் தன்னை எதிர்கொள்ள யாரும் இல்லை என்று இறுமாப்பாய் வாழ்ந்து வந்தது. அது வாழ்ந்த குகைக்கு சற்று தள்ளி ஒரு விவசாயி தன் கொட்டகையை அடித்து, தன் மாடுகளையும், ஆடுகளையும் மேய விட்டிருந்தான். அதில் ஒரு காளை மாடு மாத்திரம் தனியாக ஓரிடத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. . இந்த கரடி அதை பார்த்தது. அந்த காளை மாடு தூரத்தில் இருந்து பார்த்தபோது, மிகவும் பலம் வாய்ந்ததாக காணப்பட்டது. கரடி கொஞ்ச நாட்களாக அந்த காளையை பார்த்து வந்தது. அதனிடம் தன் பெலத்தை காட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. ஒரு நாள் அப்படி தீர்மானித்து, அதை நோக்கி அடியெடுத்து வந்தது. . காளை கரடி தன்னை நோக்கி வருவதைக் கண்டவுடன் உஷாரானது. கரடி ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும், காளையை பார்த்து அப்படியே நின்றது. இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தபடி அப்படியே நின்றுக் கொண்டிருந்தன. கடைசியில் காளை அதைப் பார்த்து, 'உனக்கு என்ன வேண்டும்? ஏன் அப்படி நின்று என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டது. அதற்கு கரடி 'நான் உன்னோடு சண்டையிட விரும்புகிறேன்' என்றது. அதற்கு காளை ஏன் என்று கேட்டது. கரடி 'நான் உன்னை விட பலமானவன் என்று என் பலத்தை காட்டி அதை நிரூபிக்க விரும்புகிறேன்' என்றது. . காளை சிரித்து, 'நான் ஏதோ உனக்கு வேண்டும் என்று விரும்புகிறாய் என்று நினைத்தேன். என்னிடம் நீ நெருங்க முடியாது, என் கொம்புகளால் உன்னை குத்தி விடுவேன்' என்றது. அதற்கு கரடி 'என் கூரிய நகத்தினால் உன்னை இரண்டு துண்டாக்கி விடுவேனாக்கும். நான்தான் காட்டின் ராஜா' என்றது. .. 'நீ காட்டின் இராஜாவானால் அங்கே போய் உன் பலத்தை காட்டு, ஏன், புல்வெளியில் வந்து காட்ட விரும்புகிறாய்? நீயும் நானும் பகைஞர்கள் அல்லவே' என்று காளை கேட்டது. அதற்கு கரடி, 'இல்லை என் பலத்தை நான் காட்டத்தான் வேண்டும்' என்று அழுத்தி சொல்லி அங்கேயே நின்றது. அப்போது காளை, 'நீ என்னோடு இருக்கும் மற்ற மாடுகளை அடித்தாயானால் நான் உனக்கு எதிர்க்கலாம், ஆனால் நான் உன்னை குத்தி அதனால் உனக்கு காயம் ஏற்பட்டால் உன் குடும்பம் என்ன ஆகும் என்று யோசித்தாயா?' என்று கேட்டது. அப்போதுதான் கரடி, 'நான் அதைக் குறித்து யோசிக்கவே இல்லையே, சரிதான் நீ சொல்வது' என்றது. காளை 'நான் பாட்டிற்கு எந்த வம்புக்கும் போகாமல் இங்கு மேய்ந்து கொண்டிருக்கிறேன். நீயும் போய் உன் காட்டில் உன் வேலையை செய்' என்று சொன்னது. கரடி திரும்ப காட்டிற்குள் போன போது, சமாதானமாய் போனால் யாரும் தோற்கப்போவதில்லை என்ற பாடத்தை கற்றுக் கொண்டது. . பிரியமானவர்களே சில வேளைகளில் தேவையில்லாமல் சிலர் மற்றவர்களிடம் வம்புக்கு செல்வதுண்டு. கேட்டால் 'நான் இருக்கும் நிலைக்கு அவர்களிடம் என் பெலத்தை காட்ட வேண்டாமா? நான் யார் என்று மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டாமா?' என்று அப்பிராணியாக இருக்கும் மற்றவர்களிடம் போய் தங்கள் சக்தியை காட்ட விரும்புவார்கள். அவர்களின் வீரதீரமெல்லாம் காட்டி பெலவீனமானவர்களை தங்கள் வார்த்தைகளாலும் செயலாலும் பீஸ் பீஸாக கிழித்து, அவர்களை மேற்கொண்டோம் என்று பெரிதாக தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். . பிரியமானவர்களே, நாம் இப்படி வாய்ச் சொல்லில் வீரர்களாகவும், அடிதடி சண்டையில் வீரர்களாகவும் இருப்பதை கர்த்தர் விரும்புவதில்லை. கர்த்தர் தம்மில் நாம் பெலன் கொள்ளவே விரும்புகிறார். 'உம்மிலே பெலன்கொள்ளுகிறமனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்' என்று வேதத்தில் காண்கிறோம். . நமக்கு வயதாக வயதாக நம் பெலன் குறுகிக்கொண்டே போகிறது. முட்டிவலியும், முதுகுவலியும் நம்மை தாக்குகின்றன. ஆரம்பத்தில் இருந்த பெலன் குறைந்து வலுவிழந்து போகிறோம். ஆனால் கர்த்தரில் பெலன் கொள்ளும்போது, காலேப் தனது 85 ஆவது வயதிலும், 'இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது' (யோசுவா 14:10-11) என்று விசுவாசத்துடன் கூற முடியும். . 'ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்' (ஆபகூக் 3:19) என்று ஆபகூக் தீர்க்கதரிசியின் கூற்றுப்படி ஆண்டவரே நமக்கு பெலனாக மாற வேண்டும். மற்ற வாயின் பெலனும் சரீர பெலனும் நமக்கு பெலனல்ல. கர்த்தரின் பெலனே நம் பெலன். அவர் நம் பெலனாக மாறும்போது, நாம் அனைவரோடும் சமாதானமாக வாழும்படி தேவன் கிருபை செய்வார். நம்முடைய பெலனெல்லாம் ஒன்றுமில்லை என்று உணரச் செய்வார். . மற்றும், நம்முடைய உண்மையான பெலன் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பெலனே ஆகும். 'பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்' (அப்போஸ்தலர் 1:8). பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பெலத்தினால் நாம் நிற்கும்போது நாம் பூமியின் கடைசி பரியந்தம் நாம் தேவனுக்கு சாட்சிகளாயிருப்போம். அப்படிப்பட்ட உன்னத பெலத்தினால் நாம் நிரம்பி கர்த்தருக்கு சாட்சிகளாயிருக்க தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா! . இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் . எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையின் துணையானார் எந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும் |