உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். - (லூக்கா 12:7). . ஒரு போதகர் ஒரு நாள் தன் சபையில் ஒரு 500 ரூபாய் நோட்டு ஒன்றை காட்டி, 'இது யாருக்கு வேண்டும்?' என்று கேட்டார். மெதுவாக கைகள் உயர தொடங்கியது. அப்போது அவர் ' உங்களில் ஒருவருக்கு இந்த ரூபாய் நோட்டை நான் கொடுக்க போகிறேன், அனால் அதற்கு முன்னால், நான் ஒரு காரியத்தை செய்ய விரும்புகிறேன்' என்றார். எல்லாரும் அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள். . அவர் அந்த ரூபாய் நோட்டை எடுத்து, கசக்கி, ஒரு பந்தை போலாக்கி, 'இப்போது யாருக்கு வேண்டும்?'என்று கேட்டார். அப்போதும் அநேகருடைய கரங்கள் உயர்ந்தது. அவர், நான் 'இப்போது ஒரு காரியம் செய்ய போகிறேன்' என்று சொல்லி, அந்த நோட்டை காலின் கீழ் மிதித்து நசுக்கி, பின் அதை எடுத்து, 'இப்போது யாருக்கு வேண்டும் இந்த நோட்டு?' என்று கேட்டார். அப்போதும் கரங்கள் உயர்ந்தன. . அப்போது அவர், தன் சபை மக்களை நோக்கி, 'இன்று நீங்கள் பெரிய பாடத்தை கற்று கொள்ள போகிறீர்கள்' என்று சொல்ல ஆரம்பித்தார். 'இந்த பணத்தை நான் என்ன செய்தாலும், நீங்கள் அதை பெற விரும்பினீர்கள். ஏனென்றால் நான் என்ன செய்தாலும், அந்த பணத்தினுடைய மதிப்பு குறைய போவதில்லை. அது 500 ரூபாய் நோட்டாகத்தான் இருக்கும். அதுப்போல உங்கள் வாழ்விலும் நீங்கள் கசக்கப்பட்டு, காலின் கீழ் மிதிக்கப்பட்டு, எல்லாராலும் தள்ளப்பட்டும் இருக்கலாம். ஆனால் கர்த்தரின் கண்களில் நீங்கள் விலையேறப்பெற்றவர்கள். உங்கள் ஆத்துமாவின் மதிப்பு மாறப்போவதேயில்லை' என்று கூறினார். . தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை எதற்காக மண்ணுக்கு மண்ணாக போகிற, மண்ணான நமக்காக ஜீவாதார பலியாக தர வேண்டும்? ஏனெனில் அவருக்கு தெரியும், நம் ஒவ்வொருவரின் ஆத்துமாவும் எவ்வளவு விலையேறப்பெற்றது என்று. அந்த விலையேறப்பெற்ற ஆத்துமா சாத்தானின் கைகளில் சிக்கி, நரகத்துக்கு சென்று விடக்கூடாதே என்று தான் அவர் நம்மேல் வைத்த அன்பின் நிமித்தமாக தம்முடைய சொந்த குமாரனையே நமக்காக கொடுத்தார். அவர் அன்புதான் எத்தனை பெரியது! . ஒருவேளை நான் எதற்கும் தகுதியில்லாதவன், எதற்கும் பிரயோஜனமில்லாதவள் என்று நீங்கள் உங்களை குறித்து எண்ணி கொண்டு இருக்கிறீர்ளோ? எப்படி அந்த 500 ரூபாய் நோட்டு எத்தனைத்தான் கசக்கப்பட்டு, காலின் கீழ் மிதிக்கப்பட்டாலும் அதன் மதிப்பு மாறததாய் இருக்கிறதோ, அதுபோல உங்கள் ஆத்துமாவும் அதன் மதிப்பு என்றும் மாறாதது. விலையுயர்ந்தது. படும் பாடுகள், துன்பங்கள், பிரச்சனைகள் எது வந்தாலும் உங்கள் ஆத்துமா விலையேறப்பெற்றது. அதை ஆண்டவர் வசிக்கும் இடமாக அவருக்கு கொடுத்து விடுங்கள். அவர் அதில் ஆட்சி செய்து, அதை இன்னும் விலையுயர்ந்தாக மாற்றி விடுவார். . மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத்தேயு 16:26) என்று வேதம் கேட்கிறது. ஒரு வேளை மாவீரன் அலெக்சாண்டரை போன்று உலக முழுவதையும் தன் கால்களுக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவன் முயற்சித்து, அதன்படி செய்தாலும், அவன் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? ஒன்றுமே இல்லை. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? உலகத்தை கொண்டு வந்து, கர்ததருடைய பாதத்தில் வைத்து, 'இதோ உலகத்தையே நான் ஜெயித்தேன், என்னுடைய ஜீவனுக்கு பதிலாக இதை வைத்து கொள்ளும்' என்று நியாயத்தீர்ப்பின் நாளிலே அவன் சொல்ல முடியுமா? கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும் (நீதிமொழிகள் 11:4) என்று பார்க்கிறோம். நியாயத்தீர்ப்பின் நாளில் பணமோ, ஐசுவரியமோ, புகழோ எதுவும் உதவாது. கர்த்தரை ஏற்று கொண்டு அவருடன் வாழ்வதே அந்நாளில் மரணத்திலிருந்து தப்புவிக்கும். . அநேக ஐசுவரியத்தை பார்க்கிலும், அநேக அடைக்கலான் குருவிகளை பார்க்கிலும், அநேக உலக காரியங்களை பார்க்கிலும் விசேஷித்ததாகிய நம் ஆத்துமாவை குறித்து நாம் எச்சரிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும். உலகத்தின் எல்லா வெற்றியையும் அடைந்து, ஆனால் நம் ஆத்துமாவை நாம் இழந்து போவோமானால், அதை காட்டிலும் பரிதாபம் வேறு எதுவும் இல்லை. ஆத்தும இரட்சிப்பை தேவன் அருமையாக எண்ணுகிறபடியினால், அந்த விசேஷித்த இரட்சிப்பை பெற்று, விசேஷித்த நம் ஆத்துமாவை பரலோகத்திற்கு பாத்திரவான்களாக ஈடேற செய்வோம். ஆமென் அல்லேலூயா! . தேவா நான் எதினால் விசேஷித்தவன் ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் எதினால் அது எதினால் நீர் என்னோடு வருவதினால் ... வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒரு மரம் கூட வருது மாராவின் நீரை தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு ... தேவா நான் எதினால் விசேஷித்தவன் ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் எதினால் அது எதினால் நீர் என்னோடு இருப்பதனால் |