பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. - (மத்தேயு 6:9-10). . மேற்கண்ட இந்த வசனத்தை நம்மில் அநேகர் ஒவ்வொரு நாளும் சொல்வதுண்டு. சிலர் ஆலயத்திற்கு செல்லும்போது சொல்வதுண்டு. ஆனால் உண்மையாகவே நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் நாம் வேலை செய்யும் இடங்களிலும் கர்த்தருடைய சித்தம் செய்யப்பட்டால் இந்த பூவுலகமே ஒரு குட்டி பரலோகமாக மாறிவிடுமல்லவா? . பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமாக ஒரு பெரிய ஹோட்டல் இருந்தது. அதில் 1600 அறைகள் இருந்தன. அந்த ஹோட்டலின் வாடகை குறைவாகவும், மற்றும் அது முக்கிய இடத்தில் இருந்தபடியாலும் விபச்சாரம் அந்த ஹோட்டலில் தலை விரித்தாடியது. ஒவ்வொரு அறையும் ஐந்து முறைக்கு மேல் ஒரு நாளைக்கு உபயோகப்படுத்தப்பட்டது. அந்த ஹோட்டலில் சுமார் 2000 பேர் வேலையில் இருந்தார்கள். பணம் குவிந்தது. . . இந்த தருணத்தில் அந்த தொழிலதிபர் கர்த்தரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். தன் வாழ்க்கை தரத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். விபச்சாரம் தன் ஹோட்டலில் இருந்து முற்றிலும் மாற வேண்டும் என முடிவு செய்தார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' (2கொரிந்தியர் 5:17) என்ற வார்த்தையின்படி அவருடைய வாழ்க்கையில் பழைய பாவமான காரியங்கள மாறி, புது சிருஷ்டியாக மாறினார். . . ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள்ளாய் நடத்த வேண்டும் என்கிற ஆத்தும பாரமும் அவருக்கு உண்டாயிற்று. அதன்படி அவர் 40 போதகர்களை தன்னிடம் வேலைக்கு அமர்த்தினார். அவர்களிடம், தன்னுடைய ஹோட்டலுக்கு வரும் பாவத்திலிருப்பவர்களிடம் பேச வேண்டும். அவர்கள் சபித்தால் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும். அவர்களோடு சாப்பிட வேண்டும். அவர்களுடைய தேவைகளுக்காக ஜெபிக்க வேண்டும் என்று கூறினார். இந்த காரியங்கள் செய்து, கொஞ்ச காலத்திற்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டாம் என்று கூறினார். . . அதன்படி போதகர்கள் நடந்து கொண்டபோது, அந்த ஹோட்டலில் வேலை செய்த 2000 பேர்களும் இரட்சிக்கப்பட்டனர். ஹோட்டலின் வாடகையை உயர்த்தியபோது, விபச்சாரிகளால் அதை கொடுக்க முடியாமற் போனது. அதனால் விபச்சாரம் அந்த ஹோட்டலில் நிறுத்தப்பட்டது. அந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த ஹோட்டலுக்கு வந்த 10,000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அல்லேலூயா! இதுதான் உண்மையான இரட்சிப்பின் அனுபவம்! இதுதான் உண்மையான மாறுதல்! . . ஒரு தனிப்பட்ட மனிதன் உண்மையாக கர்த்தரை ஏற்றுக் கொண்டு, அவருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று தாகத்தோடு நிற்கும்போது, அவரைக் கொண்டு உலகத்தை கலக்குகிறவராக கர்த்தர் மாற்றுகிறார். . . நாம் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றுக் கொள்ளும்போது, அது நம்மோடு நின்று விடக்கூடாது. நம்மில் அநேகர் இரட்சிக்கப்பட்டோம் என்று சொன்னாலும், நமக்குள் உண்டாகும் பாவ காரியங்களை விட்டுவிட்டு வெளி வருவதற்கே நம் வாழ்நாளெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அப்படி இல்லாமல், கர்த்தருடைய இராஜ்யம் பூமியில் வருவதற்கும், அவருடைய சித்தம் நிறைவேறவும் நம்மால் இயன்றதை நாம் செய்யத்தான் வேண்டும். . . 'ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்' (அப்போஸ்தலர் 9:6) என்று சவுல் என்கிற பவுல் கேட்டதுப் போல அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கும்போது, கர்த்தர் பவுலைப் போல நம்மையும் உலகத்தை கலக்குகிறவர்களாக மாற்றுவார். நாம் வேலை செய்யும் இடங்களில், நாம் செல்லும் இடங்களில் கர்த்தருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுப் போல பூமியிலேயும் செய்யப்படுவதற்கு ஒரு வாய்க்காலாக இருப்போம். அநேகரை கர்த்தருக்குள் கொண்டு வருபவர்களாக மாறுவோம். அந்தப்படியே கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் மாற்றுவாராக! ஆமென் அல்லேலூயா! . எஜமானனே என் இயேசு இராஜனே எண்ணமெல்லாம் என் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே . உயிர் வாழும் நாடகளேல்லாம் ஓடி ஓடி உழைத்திடுவேன் அழைத்தீரே உம் சேவைக்கே அதை நான் மறப்பேனோ அதை நான் மறப்பேனோ
|