மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்ளையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி - (நீதிமொழிகள் 24:11). . 'நான் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் மரிப்பதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை' என்று தரையிலே விரிக்கப்பட்டிருந்த கிழிந்த பாயில் படுத்துக் கொண்டு, கந்தலான போர்வையை போர்த்திக் கொண்டு, மனதில் பல குழப்பங்களோடு உயிருக்காக போராடிக் கொண்டிருந்தான் அந்த வாலிபன். 'எப்படியாவது வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு இரவு பகலாக உழைத்தேன், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மட்டும் சாப்பிட்டு விட்டு வைராக்கியமாக படித்தேன். இப்பொழுது ஒவ்வொரு நிமிடமும் மரண வேதனை என்னை வாட்டுகிறது. நான் வணங்கிய கடவுள் எனக்கு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை' என்ற பல கேள்விகளோடு மரணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான் அவன். . அவனுக்கு வந்த வியாதிதான் என்ன? அவன் ஒரு நாள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று வாயிலிருந்து இரத்தம் வந்தது. பின்னர் மூக்கிலிருந்தும் இரத்தம் வந்துக் கொண்டே இருந்தது. மார்பு அடைத்தது. மூச்சுவிட முடியவில்லை. செத்தவனைப் போல இருந்த அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, 'டி.பி வியாதியால் நுரையீரல் அரித்து விட்டது. குணமாக்க முடியாது. சீக்கிரமாய் மரித்து விடுவார்' என்றார். மரண பயம் அவனை வாட்டியது. இந்த சூழலில்தான் அவன் மேற்கண்டவாறு எண்ணி புலம்பிக் கொண்டிருந்தான். . அடுத்தநாள் ஒரு சிறு பெண் கதவை தட்டினாள். கையில் பைபிள் வைத்திருந்தாள். புன்முறுவலோடு இயேசுவைப் பற்றிக் கூறினாள். அவனுக்கு பயங்கர கோபம் வந்தது. 'கிறிஸ்தவ நாயே வெளியே போ' என்று கத்தினான். அதைப் பொருட்படுத்தாமல் ஐந்து நாட்கள் தொடர்ந்து வந்து இயேசுவைப் பற்றி கூறினாள் அந்த சிறுப்பெண். 'நீங்கள் வியாதியிலே மரித்துக் கொண்டிருக்கிறீர்களே' என்று அழ ஆரம்பித்தாள். சிறுபெண் தனக்காக வடித்த கண்ணீர் இவனது உள்ளத்தை உருக்கியது. பைபிளை வாங்கி படித்தான். தன் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுவை நோக்கிப் பார்த்தான். அவனது உள்ளத்தி;ல் மிகுந்த சமாதானம் கிடைத்தது. சிறிது நாட்களுக்குள் பூரண சுகமும் கிடைத்தது. இன்றைக்கும் அவர் தென் கொரியாவில் ஊழியம் செ;யது கொண்டிருக்கிறார். உலகில் மிகப்பெரிய ஆலயம் எங்கிருக்கிறது என்று கேட்டால் அது தென் கொரியாவில் என்று சொல்வார்கள். இவரது ஆலயத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான சபை அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். அந்த வாலிபன் யாரென்றால் அவர் பாஸ்டர் பால் யாங்கி சோ அவர்களே ஆவார். . நாகமானின் சுகத்திற்கு காரமான சிறுபெண்ணைப் போலவே இவருடைய மகத்தான ஊழியத்திற்கு காரணம், அந்த சிறுப்பெணணின் அன்பும், கர்த்தரைக் குறித்து அவருக்கு சொல்ல வேண்டும் என்கிற வைராக்கியமும் ஆகும். இந்த சிறுபெண்ணுக்குள் இருந்த வாஞ்சையும் தாகமும் நம்மையும் பற்றிப் பிடிக்குமானால் வியாதியினால் மாத்திரமல்ல, பாவங்களிலும், சாபங்களிலும் கட்டப்பட்டு மரணத்தை நோக்கி போய் கொண்டிருக்கின்ற ஜனங்களுக்கு மகிழ்வான வாழ்வு உண்டு என்பதை நாமும் அவர்களுக்கு சொல்ல முடியும். . ஒரு சிறுப்பெண்ணால் ஒரு பால் யாங்கி சோவை மாற்ற முடியும் என்றால், நம் பரந்த பாரத தேசத்தில் எத்தனை எத்தனைப் பேர் கர்த்தரை அறியாதபடி நித்தமும் மரித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு நம்மாலும் கர்த்தரின் அன்பைக் குறித்து கூறி மாற்ற முடியுமல்லவா? கர்;த்தர் அந்த சிறுப் பெண்ணைப் போல வைராக்கியமாய் தமக்காக எழும்புகிறவர்களை உபயோகப்படுத்த காத்திருக்கிறார். ஆனால் நம்மில் எத்தனைப் பேர் கர்த்தருக்காக எழும்ப காத்திருக்கிறோம்? . நமக்காக தம் ஜீவனையே கொடுத்தவருக்காக எழும்பி பிரகாசிப்போமா? அவருக்காக எதையாவது செய்வோமா? ஜெபித்து கர்த்தருக்காக பிரகாசிப்போம். கர்த்தர் நம்மை எடுத்து தமக்காக உபயோகிப்பார். ஆமென் அல்லேலூயா! . அறுப்பு மிகுதி இராஜாவே ஊழியர் தந்திடும் வெறுப்பில் அலையும் ஜனத்தின் மேல் என் பொறுப்பை உணர்த்திடும் . இந்தியாவில் கோடி கோடி உம்மை அறியாரே என்னை அனுப்பும் இராஜாவே நீர் என்னை அனுப்பிடும் |