உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். - (நீதிமொழிகள் 22:19). . ஒருமுறை ஒரு போதகரிடம் ஒரு வாலிபன் சென்று, 'என் வாழ்வில் எனக்கு நம்பிக்கையே இல்லை. நான் செய்வதெல்லாம் தோற்று போகிறது. என் வாழ்வில் என்னதான் நடக்க போகிறது என்று எனக்கு தெரியவில்லை. எல்லாமே இருளாக இருக்கிறது எப்படி இதிலிருந்து வெளிவருவது என்று எனக்கு தெரியவில்லை' என்று கூறினான். . அப்போது அந்த போதகர், தன் வீட்டிலிருந்து தோட்டத்திற்கு கூட்டி சென்று அவனுக்கு ஒரு ரோஜா மொட்டை காண்பித்து, 'இந்த பூ மொட்டை இதழ்கள் கீழே சிதறாமல் திறந்து என்னிடம் காட்டு' என்று கூறினார். அந்த வாலிபனுக்கு ஒன்றும் புரியவில்லை. 'நான் என் வாழ்க்கையின் நம்பிக்கைக்காக இவரிடம் வழி கேட்டால், இவர் மொட்டு பூவை திறக்க சொல்கிறாரே' என்று நினைத்து, ஆனாலும் அவர் மேல் இருந்த மரியாதையின் நிமித்தம், அந்த மொட்டை பிரிக்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் ஆகியும், அவனால் இதழ்கள் தனியே விழாமல், அதை பிரிக்க முடியவில்லை. அதை கவனித்து கொண்டிருந்த அந்த போதகர் அவனிடமிருந்து அந்த மொட்டான பூவை வாங்கி, கீழே காணும் பாடலை பாட ஆரம்பித்தார்: . இது ஒரு சிறிய ரோஜாதான் ஆனால் கர்த்தரால் உருவாக்கப்பட்டது என்னால் அதை திறக்க முடியாது ஏனெனில் என் கரங்கள் அழுக்கானவை . பூக்களை திறக்கும் அதிசய இரகசியம் என்னை போன்றோருக்கு தெரிய வேண்டுவதில்லை தேவன் அதை திறக்கின்றார் அதிசயமாய் நானாக திறந்தால் அவை மரித்துவிடும் . இந்த சிறிய பூவை திறக்க என்னால் என்றுமே முடியாத போது என் வாழ்வின் இரகசியங்களை என்னால் எப்படி திறந்து விட முடியும்? . ஆகையால் என் வாழ்வின் இரகசியங்ளை திறக்க அவரையே நான் நம்புகிறேன் என் வாழ்வின் ஒவ்வொரு அடியையும் அவரையே நம்பி எடுத்து வைக்கிறேன் . என் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை என் தேவனே அறிவார் அவற்றை அவரே எனக்காக திறப்பார் அந்த சிறிய பூவை திறப்பது போல . பிரியமானவர்களே, பூ விரிவதை பார்த்திருக்கிறீர்களா? என்ன ஒரு அழகு தெரியுமா? என்ன ஒரு அதிசயம் அது! தேவன் அவற்றை அத்தனை சிறப்பாய் செய்கிறார். அவர் செய்யும்போது, ஒரு இதழும் கீழே விழுவது இல்லை! அந்த பூவிற்கு ஒரு கேடும் வருவதில்லை. ஆனால் அதை வலுக்கட்டாயமாக நாம் திறக்க நினைத்தால் அது ஒரு நாளும் கூடாத காரியம்! அந்த பூ கசங்கி விடும். ஒரு சிறிய பூவை திறப்பது கூட நம்மால் முடியாதபோது, நம் வாழ்வில் ஏற்படும் தோல்விகளையும், துன்பங்களையும், பாடுகளையும், தீர்த்து விட நம்மால் முடியுமா? நானே அதை தீர்த்து கொள்கிறேன் என்று செய்ய ஆரம்பிப்போமானால், அது பூ மொட்டை திறக்க முயற்சிப்பது போலத்தான் ஆகும். ஆனால் பூக்களின் மொட்டுக்களை அழகாய், அதிசயமாய் திறக்கிற தேவனின் கரத்தில் நம் பிரச்சனைகளை கொடுத்து விடுவோமானால், அவர் அவற்றை அழகாக அதிசயமாக தீர்த்து வைப்பாரல்லவா? . அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். - (1பேதுரு 5:7) என்று வேத வசனம் கூறுகிறதல்லவா? உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன் என்ற வசனத்தின்படி, உங்களை நம்பிக்கையை அவர் மேல் வைத்து விடுங்கள். உங்கள் கவலைகளை அவர்மேல் வைத்து விடுங்கள். அவர் நிச்சயமாய் உங்கள் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுதலையை தருவார். உங்கள் தேவைகளை சந்திப்பார். ஆமென் அல்லேலூயா! . கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் ... நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார் .. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம் அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் |