நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். - (1 பேதுரு 2:3). . ஒரு வயது நிரம்பிய ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியில் ஒவ்வொருவரும் பரிசுகளை குழந்தைக்கு வழங்கினர். பெரியவர் ஒருவர் ஒரு அழகான பொம்மையை பரிசாக கொடுத்தார். பொம்மையின் நிறமும், தலையை அசைத்து நடப்பதும் பிள்ளையை கவர்ந்திழுத்து விட்டது. குழந்தை பொம்மையுடன் மெய் மறந்து விளையாடியது. இதை பார்த்து கொண்டிருந்த ஒருவர் பக்கத்திலிருப்பவரிடம் கூறினார், 'குழந்தை பொம்மையை வைத்து விளையாடுவதை பார்க்க எப்படியிருக்கிறது'. மற்றவர், 'இதை விட மோட்சானந்தம் வேறென்ன இருக்கிறது' என்றார். அவர் மீண்டும் தொடர்ந்தார், 'இந்த குழந்தை வளர்ந்து வாலிப வயதடையும்போது பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்' என்று கேட்டார். அருகிலிருந்தவர், 'ஐயோ அதை விட நரக வேதனை வேறு எதுவும் வேண்டாம், ஆள் வளர்ந்த மாதிரி அறிவு வளர வேண்டாமா?' என்றார். . இதைப் போல தான் நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரவில்லையென்றால் அது வேதனைக்குரிய காரியம். அநேக கிறிஸ்தவர்களுக்கு வயதாகிறது. ஆனால் அவர்கள் வளர்வதேயில்லை. நாம் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும் என்பது தேவனுடைய எதிர்பார்ப்பு. . நாம் சிறுபிள்ளையாய் இருந்தபோது தூங்கி விழித்தவுடன் படுக்கையினருகில் முழங்கால் படியிட்டு 'தேவனே இந்த நாளை எனக்கு ஆசீர்வதியும். நான் நல்ல பிள்ளையாய் நடந்து கொள்ள உதவும். நன்றாக படிக்க அருள் புரியும். ஆமென்' என்று ஒரு நிமிடம் ஜெபம் செய்திருப்போம். அப்போது அது ஆண்டவரின் பார்வையில் விலையேற பெற்றதாக இருந்திருக்கும். தேவன் அந்த ஜெபத்தில் மகிழ்ந்திருப்பார். ஆனால் ஆண்டுகள் பல உருண்டோடியும் அதே ஒரு நிமிட ஜெபத்தை நீங்கள் செய்தால் அதில் தேவன் எப்படி பிரியப்படுவார்? இன்றும் அநேக கிறிஸ்தவர்கள் காலையில் ஒரு நிமிடம் கண்மூடி ஜெபிப்பதில் திருப்தி அடைகின்றனர். . உங்கள் பிள்ளை ஒரு வயதில் அம்மா, அப்பா என்று சொன்னபோது மகிழ்ச்சியடைந்த நீங்கள் அவன் பத்து வயது நிரம்பியும் அம்மா அப்பா என்று மட்டுமே சொன்னால் நீங்கள் அவனது குரலில் பூரிப்படைவீர்களா? இல்லையே. . பிரியமானவர்களே, உங்கள் ஜெப நேரத்தையும், வேத வாசிப்பையும் அதிகரியுங்கள். வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். ஆவியின் வரங்களுக்காக ஊக்கமாய் ஜெபியுங்கள். பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை நாடுங்கள். இயேசுவைப் போல வாழ பிரயாசப்படுங்கள். பிறரது ஊழியத்தை நாடின நீங்கள் இனி பிறருக்கு ஊழியம் செய்யுங்கள். இவ்வாறு நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் உயர்ந்தால் உங்கள் கிறிஸ்தவ பயணத்தில் சரியாய் பயணிக்கிறீர்கள் என்று அர்த்தம். தகப்பனாகிய தேவன் நீங்கள் நாளுக்கு நாள் வளர்வதை கண்டு மகிழ்வார். . ஆவியில் நடக்கணுமே தேவ வார்த்தையில் நிலைக்கணுமே தூய ஆவியே என்னை நடத்திடுமே தேவ ஆவியே என்னில் நிலைத்திடுமே |