நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. - (1 தீமோத்தேயு 6:11). . ஒரு வேதியியல் வகுப்பில் பிராக்டிகல் பீரியடில் ஒரு மாணவி ஒரு வாளி நிறைய தண்ணீரில் ஒரு பெரிய அளவு பொட்டாசியத்தை போடுவதற்கு தயாராக இருந்தாள். அதை கண்ட ஆசிரியர் 'நீ என்ன செய்ய போகிறாய்' என்று கேட்டார். 'நான் இந்த பொட்டாசியத்தை இதில் போட போகிறேன்' என்று அந்த மாணவி கூறினாள். அப்போது அந்த ஆசிரியர், 'நீ அதை போடுமுன் அந்த தண்ணீரை ஒரு ஐந்து நிமிடம் கலக்கி கொண்டிரு' என்று கூறினார், அந்த மாணவி புரியாமல், 'எதற்கு ஐயா' என்று கேட்ட போது, அவர் சொன்னார், 'அதற்குள் நான் இங்கிருந்து ஓடி விடுவேன்' என்று. ஏனென்றால் அவருக்கு தெரியும், அவள் அதை போட்டால், அந்த இடம் முழுவதும் அது கறை படுத்தி விடும் என்று. . வேதத்தில் வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். (1 கொரிந்தியர் 6:18) விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள் (1 கொரிந்தியர் 10:14) என்று நம்மை எச்சரிக்கிறது. நாம் சோதனைக்குள்ளாக வரும்போது அந்த இடத்தை விட்டு ஓடி விடுவதுதான் சிறந்ததாகும். சில வேளைகளில் அந்த மாதிரி பாவம் செய்ய நேரிடும் சமயங்களில் நாம் நினைக்கிறோம், நான் இதை பார்த்து கொள்வேன், இதை சமாளிக்க என்னால் முடியும் என்று தப்பு கணக்கு போட்டு விடுகிறோம். ஒருவேளை சில வேளைகளில் நாம் எதிர் கொண்டு வெற்றி எடுக்க முடியும், அநேக வேளைகளில் விழுந்து போய் விடுவோம். . யோசேப்பை பாருங்கள், போத்திபாரின் மனைவி, அவனை பாவம் செய்யும்படி அவனை இழுத்து, அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான் (ஆதியாகமம் 39:10-12) என்று பார்க்கிறோம். பாவம் செய்ய தூண்டும் இடத்தை விட்டு ஓடிப் போனான் என்று வாசிக்கிறோம். . ஒரு வேளை உங்கள் வாழ்க்கையில் போத்திபாரின் மனைவியை போன்ற சோதனை இல்லாமலிருக்கலாம். ஆனால், வேறு ஆசைகள் உங்களை பாவம் செய்ய இழுக்கலாம், ஒருவேளை குடிப்பது உங்கள் சோதனையாய் இருந்தால், அப்படி குடிக்கும் நண்பர்கள் கூடும் இடத்திற்கு போகாதிருங்கள். இந்த இடத்திற்கு சென்றால் பாவம் செய்வோம் என்று நீங்கள் நினைத்தால் அந்த இடததிற்கு போகாதிருங்கள். நீங்கள் பாவம் செய்ய தூண்டும் எந்த நபரோடும் தனியாக இருப்பதை தவிருங்கள். அந்த இடத்தை விட்டு ஓடி விடுவது நீங்கள் பாவத்தில் விழுவதை தடுக்கும். . ஆனால் நாம் நினைக்கிறோம், ஓ, இந்த இடம் என்னை பாவத்தில் விழ வைக்கிற இடமாயிருந்தாலும், நான் விழாதபடி என்னை காத்து கொள்வேன், என்னால் அதை தடுக்க முடியும் என்று நினைப்போமானால், ஒருவேளை ஒரு முறை, இரண்டு முறை நீங்கள் அதில் விழாமலிருக்கலாம். ஆனால் ஒரு நாள் அதில் விழுந்து போவீர்கள். ஆகவே எச்சரிக்கையாயிருந்து, அந்த இடங்களை தவிருங்கள். அநேக வேளை நாம் விழுந்த பாவத்திலேயே விழுவதற்கு இதுவும் ஒரு காரணம். நம் இருதயத்தின் ஆழத்தில் அதன் ஆசை வேர்கள் ஊன்றி இருப்பதால் அந்த பாவத்தை விட்டு விலகுவது என்பது இயலாத காரியமாகும். ஆனால், அந்த மாதிரி பாவ இச்சைகளை தூண்டும் இடங்களுக்கு நாம் செல்லாமல், அதை தவிர்ப்போமானால், நிச்சயமாக நாம் அந்த பாவங்களை செய்யாதபடி நம்மை காத்து கொள்ள முடியும். ஒரு பாவத்தில் நாம் விழுந்துபோவாமானால் திரும்ப திரும்ப அதில் விழுவதற்கு அநேக சந்தர்ப்பங்கள் வரும். ஏனெனில் சாத்தான் சோதனைக்காரன் என்று அழைக்கப்படுகிறான். அவன் எப்படியாகிலும் நம்மை பாவத்தில் விழ தள்ளும்படி காத்து கொண்டிருக்கிறான். ஆனால், பாவமில்லாத கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாகிய நாம் பாவ சேற்றில் விழுந்து எழுந்தரிக்க முடியாமல் தவிக்கிறவர்களாக இருக்க கூடாது. பாவம் செய்ய தூண்டும் எந்த இடத்தையும் விட்டு நாம் ஓடிப்போய் விடுவதே அல்லது அந்த இடங்களுக்கு செல்லாமல் தவிர்ப்பதே நம்மை பாவத்தில் விழாமல் நம்மை காத்து கொள்ளும் சிறந்த வழி. சீரியல் பார்க்க தூண்டினால், டெலிவிஷனை போடாமலே இருப்பது நல்லது. சீட்டு விளையாடும் இடத்திற்கு போகாமலிருப்பதே அதிலிருந்து விடுபடுவதற்கு வழி. . நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு என்னும் வசனத்தின்படி நம்மை வழிவிலக செய்யும் பாவமான காரியங்களை விட்டுவிட்டு, நீதியையும் தேவபக்தியையும், மற்ற காரியங்களையும் அடையும்படி தேவன் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே பொறுமையோடே ஓடக்கடவோம். தேவன் தாமே பாவத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளும் கிருபைகளை தருவாராக. ஆமென். . வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் ஆவிதாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே வெற்றி கொடி பிடித்திடுவோம் வீர நடை நடந்திடுவோம் |