பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான். - (நீதிமொழிகள் 14:15). . இந்த நாட்களில் பொது மக்களை ஏமாற்றும் காரியங்கள் அதிகமாய் நடந்து கொண்டிருக்கின்றன. அநேக பைனான்ஸ் கம்பெனிகள் மக்களிடம் பணத்தை வாங்கி கொண்டு, ஒரு குறிப்பிட்ட ரொக்க பணம் சேர்ந்தவுடன் ஆள் அப்படியே பணத்தோடு மறைந்து போய் விடுகிறார்கள். எத்தனை முறை அப்படிப்பட்ட செய்திகளை கேட்டாலும் நம் மக்களும் அப்படிப்பட்ட பைனான்ஸ்களில் தங்கள் பணத்தை போட்டு இன்னும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். . போதாதற்கு நைஜீரியாவிலிருந்து ஒரு பணக்கார பெண் தன் கணவர் மரித்து போய் விட்டதாகவும், கோடிக்கணக்கான சொத்துக்களை தன் பேரில் எழுதி வைத்து போயுள்ளதாகவும், அதை உனக்கு தருகிறேன் என்று ஏமாற்றி பணத்தை சம்பாதிக்கும் முறையை கற்று வைத்து அநேகமாக நம் ஒவ்வொருவருக்கும் அதை குறித்ததான மெயில் வந்திருக்கும். இப்படி ஏமாற்றி பிழைக்கும் ஒரு கூட்டம்! தங்களிடம் அடகு வைத்த நகைகளை எடுத்து கொண்டு ஓட்டம் பிடிக்கிற ஒரு கூட்டம்! . சமீபத்தில் 'உங்கள் போன் லைனுக்கு மூன்று இலட்சம் பரிசு விழுந்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு சாம்சங் S3 போனும் இலவசம். வந்து வாங்கி கொணடு போங்கள்' என்று ஒரு போன் எங்களுக்கு வந்தது. அது உண்மையா இல்லையா என்று ஒரு பக்கம் சந்தேகம் இருந்தாலும், கூப்பிட்ட அந்த ஆள் சரியாக விலாசம் மற்றும் போன் நம்பர், பெயர் எல்லாம் கொடுத்தவுடன், ஒருவேளை சரியாக இருக்கலாம் என்று நினைத்து, சரி போய் தான் பார்க்கலாமே என்று போனோம். நாங்கள் போனவுடன், அவன் மூன்று இலட்சம் மதிப்புள்ள இலவச கூப்பன்களையும், ஒரு சாம்சங் S3 போனையும் எங்களுக்கு எடுத்து கொடுத்ததும் இல்லாமல், இன்னுமொரு புத்தகம் அதில் விலைசலுகை கொடுத்து அநேக இடங்களில் பொருட்கள் வாங்கும்படியாக அதையும் கொடுத்தான். இவற்றை கொடுத்து நீங்கள் இதற்கு 5000 ரூபாய்களை கொடுத்தால் போதும் எல்லாவற்றையும் எடுத்து கொள்ளலாம் என்று கூறினான். கூடவே ஒரு ஐபேட் அதையும் காண்பித்து, இன்னும் ஒரு 5000 கொடுத்தால் மூன்று இலட்சம் மதிப்பள்ள இலவச கூப்பன்கள், மற்றும் மற்ற எல்லாமும் கூட திரும்ப கொடுக்கிறோம் என்று கூறினான். சாம்சங் S3 மொபைல்யை பார்த்த எங்களுக்கு இதுவும் சரியாகத்தான் இருக்கும் என்று மீண்டும் 5000 ரூபாய்களை கொடுத்து, ஐபேடையும் வாங்கினோம். . ஒரே சந்தோஷம்! பரவாயில்லையே, நமக்கு தேவனுடைய கிருபையால் இத்தனையும் கிடைத்திருக்கிறதே என்று வீட்டிற்கு வந்தோம். வந்து மொபைல் சார்ஜ் செய்ய பார்த்தால் பேட்டரி ஒரிஜினல் இல்லை. சரி பேட்டரிதான் ஒரிஜினல் இல்லை, மொபைலாவது ஒரிஜினலாக இருக்கும் என்று பார்த்தால், அப்படியே சாம்சங் S3 மாதிரியே செய்யப்பட்ட டூப்ளிகேட் மொபைல்! ஐபேடுக்கு சார்ஜர் உள்ளே கூட போக மாட்டேன் என்றது. அப்போதுதான் உணர்ந்தோம், ஐயோ நாம் ஏமாந்து போய் விட்டோம் என்று! சரி இலவச கூப்பன்களாவது உதவுமா என்று பார்த்தால், அது அத்தனையும் பிரஞ்ச் படிக்கவும், இங்கிலீஷ் எழுதவும், ஹோமியோபதி சிகிச்சை தோல் வியாதிக்கும், மற்றும் தேவையில்லாத காரியங்களுக்கும் கூப்பன்கள்! ஒன்றுக்கு இரண்டு வாங்கி, 10,000 ரூபாய்கள் வீணாக போனதுதான் மிச்சம்! அதை அவன் முகத்திலேயே விட்டெறிந்து விட்டு வந்து விட்டோம். . கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை இப்படி அநியாயமாக பிடுங்கி கொண்டு போகிற ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின் மேல் கவனமாயிருக்கிறான் என்று வேதம் கூறுகிறது. யார் என்ன சொன்னாலும் அதை உடனே நம்பிவிடக்கூடாது. அதை யோசித்து பார்த்து, இதை இவர்கள் செய்வதால் இவர்களுக்கு என்ன லாபம்? நமக்கு என்ன நஷ்டம் என்று யோசித்து பார்க்கவே வேண்டும். . ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள் (மத்தேயு 10:16) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஏமாற்றுகிறவர்கள் ஓநாய்களை போலவும், நாம் ஆடுகளை போலவும் இருந்தாலும், நாம் ஞானமாய் சில வேளைகளில் நடந்து கொள்வது மிகவும் அவசியம். பேதைகளாகவே இருந்துவிடக்கூடாது. புறாக்களை போல கபடற்றவர்களாய் இருந்தாலும், சர்ப்பங்களை போல வினாவுள்ளவர்களாகவும் ஜீவிப்பது மிகவும் இந்த நாட்களில் தேவையாயிருக்கிறது. எளிமையானவர்களையும், பேதைகளையும் ஏமாற்றி திரியும் கூட்டத்தின் மத்தியில் நாம் பேதைகளாயிருந்தாலும், இப்படி ஏமாற்றி திரிபவர்களை அடையாளம் கண்டு கொள்ள தேவன் கிருபை அளிக்கும்படி அதற்காகவும் ஜெபிக்க வேண்டும். நம்மில் அநேகர் விற்கிறவர்களின் பேச்சை கேட்டு எத்தனையோ பொருட்களை வாங்கி வந்து ஏமாந்து போன கதைகளை சொல்ல முடியும், இனி ஜாக்கிரதையாக இருக்க முயற்சி செய்வோம். . ஒரு நாள் வரும், கர்த்தர் ஆட்சி செய்யப்போகும் 1000 வருட அரசாட்சியில் 'அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை' (ஏசாயா 35:8) வார்த்தைகளின்படி, அப்போது நம்மை நாம் பேதையாயிருக்கிறோம் என்று யாரும் ஏமாற்ற முடியாது. தேவனே நம்மை ஞானிகளாக்குவார். அதுவரை நாம் வாழும் இந்த உலகில் கர்த்தருடைய வார்த்தைகளே, அவருடைய வேதமே நம்மை ஞானியாக்குகிறதாயிருக்கிறது. கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. - (சங்கீதம் 19:7). . நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் (ரோமர் 16:19) என்ற வார்த்தைகளின்படி, நாம் தீமை செய்வதற்கு பேதைகளாகவும், நன்மை செய்வதற்கு ஞானிகளாகவும் இருக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வராக! . கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம் . |