Friends Tamil Chat

வெள்ளி, 10 ஜனவரி, 2014

10th January 2014 - பாவங்களை தூரமாய் விலக்கின தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜனவரி மாதம் 10-ம் தேதி - வெள்ளி கிழமை
பாவங்களை தூரமாய் விலக்கின தேவன்
...

கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, கடந்த மூன்று வாரமாக அனுதின மன்னா வெளிவர முடியாதவாறு சர்வர் தடையாக இருந்தது. அதை சரி செய்யும்படி Word of God டீமின் தலைவர் சகோதரர் யேசுதாஸ் சாலமன் அவர்கள் மிகவும் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அவர்களுடைய சர்வர் மூலமாகத்தான் நாம் அனுதின மன்னா அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அதை சரி செய்ய ஒரு இலட்சம் வரை செலவாகும் என்று சொல்லியிருந்தார்கள். அநேகர் மன்னா என் வரவில்லை என்று கேட்டு எழுதியிருந்தீர்கள். கேட்டிருந்த ஒவ்வொருக்கும் ஜெபக்குறிப்பாக இந்த காரியத்தை எழுதியிருந்தோம். அப்படி ஜெபித்த நம்முடைய ஜெபங்களை கேட்டு, எந்த பணமும் இல்லாமல் சர்வர் வேலை செய்ய தேவன் கிருபை செய்தார். ஜெபித்த ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சாத்தானுடைய போராட்டத்தில் இறுதி வெற்றி நமக்கே! அல்லேலூயா!

.

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். - (சங்கீதம் 103:12).

.
ஒரு பணக்கார வாலிபன் ஒரு அழகிய பெண்ணை திருமணம் செய்தான். அவளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தான். ஆனால் அவளோ எதையோ இழந்தவள் போல சந்தோஷமற்றவளாக காணப்பட்டாள். அவளை வேறு நாடுகளுக்கு கொண்டு சென்று விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்து சந்தோஷிப்பிக்க முயன்றான். ஆனால் எதுவும் அவளை சரியாக்கவில்லை. வைத்தியர்களிடம் கொண்டுப் போய் காண்பித்தான். ஆனாலும் அவள் மனநிலை மாறவில்லை.
.
அவர்கள் ஆலயத்தில் ஒரு நாள் ரிட்ரீட் வைத்திருந்தார்கள். அங்கு அவளை அந்த வாலிபன் கூட்டி சென்றான். அங்கு வந்திருந்த விசேஷித்த ஊழியரிடம் தன் மனைவியை கூட்டி சென்று 'இவள் சந்தோஷமாகவே இல்லை. என்ன செய்தாலும் சோர்ந்து காணப்படுகிறாள்' என்று கூறினான்.
அந்த போதகர் அவளிடம் என்ன விஷயம் என்று கேட்டபோது திருமணத்திற்கு முன் தான் பெரும் தவறு செய்ததாகவும், தான் கர்த்தரிடம் அறிக்கையிட்டாலும் அதன் பாரம் போகவில்லை என்றும் அவள் கூறினாள்.
.
அந்த போதகர் அவளை ஒரு குளம் இருந்த இடத்திற்கு கூட்டி சென்றார். அவளிடம் ஒரு கல்லை கொடுத்து அதை குளத்தில் தூக்கி எறிய சொன்னார். அவள் தூக்கி எறிந்தாள். போதகர் அவளிடம் 'என்ன கண்டாய்' என்று கேட்டார். அவள், 'நான் தூக்கி எறிந்தவுடன் சத்தம் வந்தது. பின் தண்ணீர் தெறித்தது, பின் அந்தக் கல் குளத்தின் ஆழத்திற்கு சென்று விட்டது' என்றாள்.
.
பின் அந்த போதகர் அவளுடைய பாவ நிலையை அறிந்தவராக, 'இப்போது ஒரு பெரிய கல்லை எடுத்துப் போடு' என்று சொன்னார். அவள் பெரிய கல்லை எடுத்துப் போட்டாள். போதகர், 'இப்போது என்ன காண்கிறாய்' என்றுக் கேட்டார். அவள், 'இப்போது பெரிய சத்தம் வந்தது, தண்ணீர் எங்கும் தெறித்தது, கல் குளத்தின் அடியில் சென்று விட்டது. எங்கும் அமைதியானது' என்றாள்.

.
அப்போது அந்த போதகர், 'உன் பாவமும் அப்படித்தான், நீ கர்த்தரிடம் அதை உண்மையான மனதுடன் அறிக்கை செய்தப்பின் அதை கடலில் எறிவதைப்போன்று, அது திரும்ப தேவனால் நினைக்கப்படுவதில்லை. ஆகவே நீ சந்தோஷமாய் உன் கணவனுடன் வாழ்க்கை நடத்து' என்றார். கர்த்தருக்குள் தன்னுடைய நிலையை உணர்ந்த அந்தப் பெண் சந்தோஷமாய் திரும்பி சென்றாள்.
.
'தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்' (மீகா 7:18-19) என்று வேதம் கூறுகிறது. 'நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்' (1 யோவான் 1:9) என்றும் வேதம் கூறுகிறது.
.
பிரியமானவர்களே பாவ உணர்வினால் வாதிக்கப்பட்டு, தேவன் என் பாவங்களை மன்னிப்பாரா என்று குற்ற உணர்ச்சியினால் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? அதை கர்த்தரிடம் அறிக்கை செய்து விடுங்கள். உண்மையான இருதயத்தோடு அதை அறிக்கை செய்தால், அந்த பாவங்களை சமுத்திரத்தின் ஆழத்தில் தேவன் போட்டு விடுவார். தம் முதுகின் பின்னால் அதை எறிந்து விடுவார். நாம் அதன்பின் குற்ற உணர்ச்சியோடு வாழ வேண்டிய அவசியம் இல்லை.
.
'நான் எவ்வளவு பெரிய பாவம் செய்திருக்கிறேன் தெரியுமா?' என்று நீங்கள் சொன்னால், அந்த பெண்ணின் நிலையைப் போல நீங்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தால், பெரிய கல்லைப் போட்டாலும், அது குளத்தின் அடியில்தான் சென்றது. சிறியக் கல்லைப் போட்டாலும் அது குளத்தின் அடியில் தான் சென்றது. தேவனிடம் பாவங்களை உண்மையாக அறிக்கை செய்தப்பின் அதைக் குறித்து நாம் கலங்க வேண்டியதில்லை.
.
இந்த புதிய வருடத்தில் நம்முடைய பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்து அவற்றை மீண்டும் செய்யாதபடி விட்டுவிடுவோம். தேவ கிருபையை பெற்றுக் கொள்வோம். அப்போது 'மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்' என்ற வசனம் நம் வாழ்விலும் நிறைவேறும். மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரம் என்று நம்மால் அளக்க முடியுமா? அதை அளக்க அளக்க அதன் தூரம் நீண்டுக் கொண்டே போகும். அந்த அளவு தேவன் நம் பாவங்களை நம்மை விட்டு விலக்கி விட்டார். அதன் பின் நாம் அதை தொடர்ந்து பிடித்து மீண்டும் பாவம் செய்து, அதை நம் அருகில் கொண்டு வர வேண்டாம். ஒரு முறை தேவன் விலக்கியதை நாம் விலக்கி, கர்த்தருக்குள் பரிசுத்தமாய் வாழுவோமாக.
.
புதிய வருடத்தில் புதிய சிருஷ்டிகளாக, பாவத்திற்கு மரித்து, பரிசுத்தமாய் வாழ தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக ஆமென் அல்லேலூயா!

.

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்

தம் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்

.

ஆழ்கடலில் எறிந்து விட்டார்காலாலே மிதித்து விட்டார்

நினைவு கூர மாட்டார் என்நேசரை துதிக்கின்றேன்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே எங்கள் பாவங்களை மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அத்தனை தூரம் விலக்கி விட்டதற்காக உமக்கு ஸ்தோத்திரம். பாவம் செய்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியோடு வாழ்கிற ஒவ்வொருவரையும் அவர்கள் தங்க்ள பாவங்களை அறிக்கை செய்யும்போது மன்னித்து, உன் பாவங்களை ஆழ்கடலில் எறிந்து விட்டேன் என்று சொல்லி அவர்களை தேற்றும். நம்பிக்கையோடு இந்த புதிய வருடத்தில் பிரவேசித்து உமக்காக வாழ செய்யும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.