'வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து'. - (நீதிமொழிகள் 4:24). . நம்மில் அநேகருக்கு நாவை கட்டுப்படுத்த வேண்டுமென்ற வாஞ்சை இருக்கிறது. ஆம், கட்டுப்படாத நாவினால் குடும்ப உறவுகளுக்குள், சபைகளுக்குள் ஏற்படும் பிளவுகள், காயங்கள், வீண்பிரச்சனைகள்தான் எத்தனை எததனை? சிலர் நாவை கட்டுப்படுத்துவது எப்படி என்று ஊழியர்களிடம் கேட்கின்றனர். நாவை ஒருவராலும் கட்டுப்படுத்தவே முடியாது. அநேகர் தங்கள் நாவை கட்டுப்படுத்தாததால் தங்கள் சாட்சியை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். . இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் (மத்தேயு 12:34-ன் பின்பாகம்) என்று வேதம் நமக்கு தெளிவாக கூறுகிறது. நம் இருதயத்தின் நிறைவைத்தான் நம்முடைய வாய் பேசுகிறது. ஒரு வேளை நம் வாயையும் நாவையும் மாற்றினால் ஏதாவது பிரயோஜனம் உண்டா? இல்லை, அதினால் பிரயோஜனம் ஒன்றுமில்லை. பின் எப்படி மாற்றுவது? எப்படி என்று பார்ப்போம். உதாரணமாக, வீட்டின் மேலேயுள்ள தண்ணீர் தொட்டி உப்பு படிந்து பாசி பிடித்து அழுக்கு நிறைந்து காணப்படுகிறது என வைத்து கொள்வோம். வீட்டினுள் உள்ள குளியலறையில் தண்ணீர் குழாயை திறந்தால் எப்படிப்பட்ட தண்ணீர் வரும்? அழுக்கு தண்ணீர் தானே! என் நாவை கட்டுப்படுத்த முடியவில்லையே என கூறுவது, இந்த குழாயில் ஏன் அழுக்கு தண்ணீர் வருகிறது என கேட்பதற்கு சமமானதாகும். குழாயை மாற்றினாலும் தண்ணீர் சுத்தமாக வராது. மேலேயுள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் பண்ணுங்கள். தானாகவே குழாயில் சுத்தமான தண்ணீர் வரும். அதுபோல நம்முடைய இருதயம் சுத்தமாக இருந்தால் தான் வார்த்தையும் சுத்தமாக வரும். . 'எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து' (நீதிமொழிகள் 4:23-24) என்று வசனம் கூறுகிறது. அதன் பொருள், முதலாவது நம் இருதயத்தை தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாய் காத்து கொள்ள வேண்டும். பின்பு பேசும் வார்த்தை கண்கள், கால், நடை இவைகளில் கவனமாயிருக்கும்படி போதிக்கப்படுகிறோம். ஆகவே இருதயம் மாற்றப்பட்டால் ஒழிய நமது நடவடிக்கை மாய்மாலமின்றி உண்மையாய் மாற்றப்பட வழியே இல்லை. . பிரியமானவர்களே, மனித கண்களுக்கு தெரியாத நம் இருதயமே திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாயிருக்கிறது இப்படிப்பட்ட இருதயத்தில் நாம் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? 'என் இருதயத்தை சுத்தமாக்கினேன் என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்? (நீதிமொழிகள் 20:9) என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் இருதயத்தை நம் சுய பெலனால் சுத்தமாக்க முடியாது. தேவ தயவையே நாட வேண்டும். வேத வசனமாகிய அவரது வார்த்தைகளை அதிகமாய் வாசித்து அதை இருதயத்தில் வையுங்கள். ஜெபத்தில் கர்;த்தருக்கு காத்திருங்க்ள. அப்போது நம் இருதயத்தை தேவன் ஸ்திரப்படுத்துவார். இவ்விரண்டையும் நாம் உண்மையாய் செய்யும்போது தேவன் நம் உள்ளத்தை நிச்சயமாய் மாற்றுவார். மேலேயுள்ள தண்ணீர் தொட்டி சுத்தமாகி விட்டதென்றால் வீட்டில் எந்த குழாயிலும் சுத்தமான தண்ணீரே வரும். ஆம் நம் இருதயம் மாற்றப்படும்போது, சுத்தமாகும்போது, வாயின் தாறுமாறு தூரமாகும். உதடுகளின் மாறுமாடு நம்மை விட்டு மாறும். கண் நேராய் நோக்கும். கால் தீமைக்கு விலகும். ஆமென் அல்லேலூயா! . இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் ... அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் |