Friends Tamil Chat

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

15th August 2013 - நீயுனக்கு சொந்தமல்லவே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி - வியாழக்கிழமை
நீயுனக்கு சொந்தமல்லவே
....

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? - (மத்தேயு 16:26).

.
ஒரு 24 வயது சீன வாலிபன் தன் ஆத்துமாவை 10 யானுக்கு (சீன பணம்) ஏலம் விடுவதாக இன்டர்நெட்டில் ஒரு ஏலக்கம்பெனியின் மூலமாக அறிக்கை விட்டான். உடனே அதை வாங்குவதற்கு 58 பேர் போட்டி போட்டனர். ஒரு வாரத்திற்குள் அவனுடைய ஆத்துமாவிற்கு 681 யான் (Yuan) வரை ஏலம் பேசப்பட்டது. ஆனால் அவன் ஏலம் இட்ட கம்பெனி, கடவுளுக்கு மாத்திரம் தான் ஆத்துமாக்களின் மேல் உரிமை உள்ளதென்று சொல்லி அந்த ஏலத்தை தடை செய்தது. இது உண்மையில் நடந்த சம்பவம்! என்ன ஒரு வினோதமான காரியம்!

.

ஏன் ஒரு மனிதன் மிகச்சிறிய பணமான 10 யானுக்கு தன் ஆத்துமாவை ஏலம் விட வேண்டும்? வேதத்தில் சில பேருடைய காரியங்கைள பார்க்கும்போது இது ஒன்றும் பெரிய காரியமாக தோன்றவில்லை! யூதாஸ் காரியோத் 30 வெள்ளி காசுக்காக இயேசுகிறிஸ்துவை காட்டி கொடுத்து தன் ஆத்துமாவை இழந்தான், ஆகான் ஒரு பாபிலோனிய சால்வைக்காகவும், இருநூறு வெள்ளி சேக்கலுக்காகவும், ஒரு பொன்பாளத்துக்க்காவும் தன் ஆத்துமாவை இழந்தான் (யோசுவா 7), எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசி, ஒரு தாலந்து வெள்ளிக்காகவும், இரண்டு மாற்று வஸ்திரங்களுக்காவும் தன் ஆத்துமாவை இழந்து போனான் (2 இராஜாக்கள் 5), ஏசாவோ ஒரு கோப்பை கூழுக்காக தன் சேஷ்ட புத்திர பாகத்தையே இழந்தான். என்ன ஒரு பரிதாபமான முன் உதாரணங்கள்!

.

நாம் இருக்கும் இந்த உலகத்தில் எத்தனையோ பேர், இது போன்ற மிக சிறிய காரியங்களுக்காக தங்கள் ஆத்துமாக்களை இழந்து கொண்டிருக்கின்றனர். பிசாசுக்கு அதை விற்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தெரியவில்லை தங்கள் ஆத்துமா எத்தனை விலையேறப் பெற்றதென்று!

.

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? என இயேசுகிறிஸ்து கூறினார். ஆம் இந்த உலகத்தின் ஆஸ்திகளையும், ஏன் முழு உலகத்தையும் ஆண்டு அனுபவிப்பனாக இருந்தாலும், தன் ஆத்துமாவை அவன் இழந்து போனால், அவனைவிட பரிதாபமானவன் இந்த உலகததில் வேறு யாரும் இல்லை!

.

ஒரு மனிதன் தன் ஆத்துமாவிற்கு ஈடாக என்னத்தை செலுத்தி அதை மீட்டுக் கொள்ள முடியும்? எப்போது ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து தேவன் அவர்களுக்கு கொடுத்திருந்த ஆளுகையை பிசாசின் கையில் கொடுத்தார்களோ அன்றிலிருந்து பிசாசின் ஆளுகைக்கு இந்த உலகம் விடப்பட்டிருக்கிறது. அதனால்தான், அவன் உலக இரட்சகரான இயேசுகிறிஸ்துவிடமே வந்து, அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். - (மத்தேயு 4:8-10). அவர் தம் வார்த்தையினால் அவனை மேற்கொண்டு தம் ஆத்துமாவை காத்து கொண்டார். அல்லேலூயா! நாமும் கூட சாத்தான் நம்மை இந்த உலகத்தின் ஆசைகளை காட்டி நம் ஆத்துமாவிற்கு விலை பேசும்போது கர்த்தருடைய வார்த்தைகளை பேசி நாம் நம் ஆத்துமாக்களை காத்துக் கொள்ள வேண்டும். நம் ஆத்துமாக்களை இந்த அழிய போகிற உலகத்தின் இச்சைகளுக்காக ஒரு போதும் விற்றுப் போட கூடாது.

.

மட்டுமல்ல, கிறிஸ்து நமக்காக, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் பாடுபட்டு இரத்தம் சிந்தி தம் இரத்தத்தையே கிரயமாக செலுத்தி, நம்முடைய ஆத்துமாக்களை மீட்டு விட்டபடியால், நம் ஆத்துமாக்கள் கிறிஸ்துவுக்கு சொந்தமாகி விட்டன. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களேளூ ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் (1கொரிந்தியர் 6:19-20) என்று நாம் பார்க்கிறோம். இப்போது நாம் நமக்கு சொந்தமானவர்களல்ல, கிறிஸ்துவே அதற்கு சொந்தமானவர். ஆகவே நாம் நம் சொந்தத்திற்கு அதை பிரயோஜனப்படுத்த முடியாது. மற்றும் பிசாசுக்கு அதன் மேல் இப்போது எந்த அதிகாரமும் இல்லை. ஆமென் அல்லேலூயா!

.

உலகத்தின் எந்த பணக்காரரும் தன்னுடைய எல்லா பணத்தையும் செலுத்தினாலும் உங்கள் ஆத்துமாவை வாங்க முடியாது. அது அத்தனை விலையேறப் பெற்றது. அதனால்தான், தேவன் தம்முடைய சொந்த குமாரனையே இந்த உலகத்திற்கு அனுப்பி, அவருடைய மாசற்ற பரிசுத்த சொந்த இரத்தத்தினாலே நமது ஆத்துமாவை மீட்க கிருபாதார பலியாக அனுப்பினார். அவர் நம்மேல் வைத்த அன்பும் தயவும் பெரியது! அதை அசட்டை செய்யாமல், நம் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை அழிந்து போகும் இந்த உலகத்தின் காரியங்களுக்காக விற்றுப்போடாதபடிக்கு காத்துக்கொள்வோமாக!

.

நீயுனக்கு சொந்தமல்லவே, மீட்கப்பட்ட பாவி

நீயுனக்கு சொந்தமல்லவே!

நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்

நீயுனக்கு சொந்தமல்லவே!

...

பழைய பாவத்தாசை வருகுதோ

பிசாசின்மேல் பட்சமுனக்கு திரும்ப வருகுதோ

அற்ப நிமிஷத்தாசை காட்டியே

அக்கினிக்கடல் தள்ளுவானே

நீயுனக்கு சொந்தமல்லவே

ஜெபம்

எங்கள் மேல் அன்பு வைத்து, உமது சொந்த குமானையே எங்களுக்காக இந்த உலகத்திற்கு அனுப்பி எங்கள் பாவங்களிலிருந்து எங்களை மீட்டு எங்கள் ஆத்துமாக்களை உமக்கு சொந்தமாக்கி கொண்டீரே உமக்கு நன்றி ஐயா. இந்த பொல்லாத உலகின் ஆசை இச்சைகளில் விழுந்து போய் விலையேறப்பெற்ற எங்கள் ஆத்துமாக்களை விற்று போடாதபடிக்கு எங்களை காத்துக்கொள்ளும். நாங்கள் எங்களுக்கு சொந்தமல்ல என்பதை எங்களுக்கு உணர்த்தும். எங்கள் ஆவி ஆத்துமா சரீரம் உமக்கே சொந்தம் என்று உமக்கே எங்களை அர்பணிக்கிறோம். ஏற்று எங்களை உமக்கென்று உருவாக்கும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.