கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது - (சங்கீதம் 12:6). . சமீபத்தில் ஒரு விஞ்ஞானி ஒரு மனிதன் தன்னிடம் காண்பிக்கப்பட்ட எந்த ஒரு பட்டியலிலும் ஏழு காரியங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார். மற்றொரு விஞ்ஞானி 'அதனால்தான், ஏழு என்கிற காரியம் நாம் இருக்கிற இந்த உலகில் அடிக்கடி காணப்படுகிறது. உதாரணமாக, ஏழு உலக அதிசயங்கள், ஏழு ஸ்வரங்கள், ஏழு கடல்கள், கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு, வாரத்தில் நாட்கள் ஏழு, வானவில்லின் நிறங்கள் ஏழு.' என்று கூறினார். . அது சரியென்றாலும், வேதத்தில் ஏழு என்கிற எண் மிகவும் விசேஷித்தாய் இருக்கிறது. அதை குறித்து ஆராய்ந்தால் மிகவும் அற்புதமான ஒரு எண்ணாக இந்த ஏழு திகழ்கிறது. இந்த எண் வேறு எந்த எண்களைக் காட்டிலும் அதிகமான முறை உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏழு என்ற எண்ணும், அதின் பெருக்கு தொகையான எண்களுமே அதிகமாக வேதத்தில் காணப்படுகிறது. ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்ற வார்த்தை ஆங்கிலத்தில் 287 தடவை வருகிறது, அதாவது 7x41 (Seven) ஏழாவது என்ற வார்த்தை 98 தடவை, அதாவது 7x14 (Seventh) ஏழு முறை என்ற வார்த்தை 7 தடவை வருகிறது (Seven Fold) எழுபது என்ற வார்த்தை 56 தடவை வருகிறது அதாவது 7 x 8. . தேவன் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்து அந்த நாளை பரிசுத்தபடுத்தினார். ஆபிரகாமுக்கு ஏழு ஆசீர்வாதங்கள் ஆதியாகமம் 12:2-3-ல் கூறப்படுகிறது. பிரதான ஆசாரியன் ஏழு முறை பலியின் இரத்தத்தையும், அபிஷேக எண்ணெயையும் கர்த்தருக்கு முன்பாக கிருபாசனத்தின் மேல் தெளிக்க வேண்டும். யோசுவா எரிகோவை சுற்றி வந்தபோது, ஏழு ஆசாரியர்கள், உடன்படிக்கை பெட்டியை சுமந்தபடி, ஏழு எக்காளங்களை முழக்கி, ஏழாவது நாள், ஏழு தடவை சுற்றி வந்து ஜெயத்தை சுதந்தரித்தார்கள். வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு சபைகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும், ஏழு பொன் குத்து விளக்குகள், ஏழு நட்சத்திரங்கள், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், ஏழு கண்கள், ஏழு ஆவிகள், ஏழு கோபகலசங்கள், ஏழு இடிமுழக்கங்கள், என்று சொல்லிக் கொண்டே போகலாம். . சங்கீதங்களில் 126 சங்கீதங்கள் தலைப்புகளோடு உள்ளன. (7x18)அவைகளில் ஏழு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 1. தாவீது (56 சங்கீதங்கள் எழுதப்பட்டுள்ளன) 2. கோராகின் புத்திரர் (11) 3. ஆசாப் (12) 4. ஏமான் (1) (சங்கீதம் 88) 5. ஏத்தான் (1) (சங்கீதம் 89) 6. மோசே (1) (சங்கீதம் 90) 7. சாலமோன் (1) (சங்கீதம் 72) . புதிய ஏற்பாட்டில் ஏழு சங்கீதங்களின் வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்கீதம் 69 ன் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் ஏழு தடவை வருகின்றன. யோவான் சுவிசேஷத்தில் ஏழு அற்புதங்களை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. . மத்தேயு சுவிசேஷம் 13-ம் அதிகாரத்தில் ஏழு உவமைகள் கூறப்பட்டிருக்கின்றது. இன்னும் எத்தனையோ வசனங்கள் ஏழு என்ற எண்ணை பயன்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த முறை நாம் வேதம் வாசிக்கும்போது, ஏழு என்ற எண் வரும்போது நிறுத்தி, தேவன் இந்த இடத்தில் என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறார்? என்று யோசித்து, அவருடைய ஞானத்திற்காக ஜெபிப்போம். கர்த்தருடைய ஞானம் அளவற்றது. அவருடைய வார்த்தைகளில்தான் எத்தனை பொருள்கள் அடங்கியிருக்கின்றன! இந்த அற்புத தேவனை தெய்வமாக கொண்டிருக்கும் நாம் எவ்வளவு பாக்கியவான்கள்! ஆமென் அல்லேலூயா! . எந்தன் உதடும் உந்தனை போற்றும் என் கரங்கள் குவிந்தே வணங்கும் பாக்கியம் நான் கண்டடைந்தேனே யாக்கோபின் தேவனை என் துணையே |