அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். - (1பேதுரு 5:7) . . ஒரு தச்சன் ஒரு வீட்டிற்கு வேலையினிமித்தம் போயிருந்தார். ஒரு மணிக்கு இவ்வளவு பணம் என்று பேசப்பட்டிருந்தது. அதன்படி அவர் போகும்போது, அவருடைய காரின் சக்கரம் வெடித்து, அதை மாற்றும்போது ஒரு மணிநேரம் வீணானது. அதற்குப்பின் அவர் கொண்டு சென்றிருந்த மின்சார ரம்பம் வேலை செய்யவில்லை. கஷ்டப்பட்டு, வேலையை முடித்துவிட்டு, அவர் வீட்டிற்கு செல்ல முயன்றபோது, அவருடைய கார் திரும்பவும் மக்கர் செய்தது. . அவர் வேலைக்கு சென்றிருந்த வீட்டில் இருந்தவரே, அவரை காரில் கொண்டுப் போய் வீட்டில் விடுகிறேன் என்றதால், அவருடனே காரில் சென்றார். அப்படி போகும்போது, நடந்த காரியங்களை மனதில் வைத்துக் கொண்டு அமைதியாக காரில் சென்றுக் கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது, வீட்டில் நுழைவதற்கு முன், வீட்டின் முன் இருந்த ஒரு மரத்தை தன் இரு கரத்தாலும் தொட்டுப் பின் வீட்டிற்குள் சென்றார். அவர் வீட்டின் உள்ளே சென்றபோது, அவர் முகம் மலர்ந்திருந்தது. காரில் இருந்தபோது இருந்த அமைதியும், குழப்பமும் அவர் முகத்தில் இருந்து மறைந்திருந்தது. அதைக்கண்ட காரில் அவரை விட்டவர் தன் வீடு சென்றார். . அடுத்த நாள் அவரிடம், 'நீங்கள் அந்த மரத்தை ஏன் தொட்டீர்கள், அதன்பின் உங்கள் முகத்தில் ஒரு சந்தோஷத்தை கண்டேன். என்ன விஷயம்?' என்று கேட்டார். அதற்கு அந்த தச்சன், 'ஓ, அந்த மரம் என் தொல்லைகளின் மரம், எனக்கு தெரியும், என் வேலையினிமித்தம் அநேக தொந்தரவுகளும், பிரச்சனைகளையும் நான் சந்திக்க வேண்டுமென்று. ஆனால் என் வீட்டிற்குள் நுழையும்போது, நான் அந்த தொல்லை மரத்தில் என் தொல்லைகளையும், பிரச்சனைகளையும் தொங்க விட்டு விடுவேன். என் வீட்டிற்குள் செல்லும்போது, மன அமைதியோடும், சந்தோஷத்தோடும் செல்லுகிறேன். அடுத்த நாள் நான் திரும்ப அந்த மரத்தை கடக்கும் போது, முந்தின நாளில் இருந்த பிரச்சனைகள் எதுவும் என் ஞாபகத்தில் இருப்பதில்லை. ஆகையால் நான் சந்தோஷமாய் என் குடும்ப வாழ்க்கையை கழிக்கிறேன்' என்று கூறினாராம். . பிரியமானவர்களே, நமக்குக்கூட நம் கவலைகளையும், பிரச்சனைகளையும், போராட்டங்களையும் வைத்துவிடும்படி ஒரு மரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் சிலுவை மரம். வசனம் சொல்லுகிறது, 'அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்' என்று. அப்படி கிறிஸ்துவின் மேல் நம் கவலைகளை வைத்துவிட்டால், நாம் கலங்கிக் கொண்டும், அழுதுக்கொண்டும் இருக்க தேவையில்லை. ஏனெனில் நம்மை விசாரிக்கிற தேவன் ஒருவர் உண்டு. . சிலருக்கு கவலைப்படுவதிலும், சோர்வுக்குரிய காரியங்களையும், நடந்து முடிந்த சோகமான நிகழ்ச்சிகளையும் திரும்ப திரும்ப யோசித்து, அதையே நினைத்து வருத்தப்பட்டு தங்கள் காலத்தை கழிக்கிறார்கள். சரி, நடந்தது நடந்து விட்டது, அதையே யோசித்து என்னப்பயன் என்று நினைப்பதில்லை. அணை உடைந்தப்பின் கடந்து சென்ற வெள்ளம் என்ன செய்தாலும் திரும்ப வராது, உடைந்த கண்ணாடியை திரும்ப ஒட்ட வைக்க முடியாது. ஆனால் உடைந்த கண்ணாடியையே கையில் வைத்துக் கொண்டு, எப்படியாவது ஒட்ட வைக்க வேண்டும் என்று வாழ்க்கை முழுக்க பிரயத்தனம் செய்தாலும் அது முடியுமா? ஒருக்காலும் முடியாது. ஆனால் அதற்காக கவலைப்படுவதினால் என்ன பயன்? . சிலருடைய வாழ்வில் எத்தனையோ பெரிய இடர்களும் பிரச்சனைகளும், தவறி தவறு செய்து வருந்திய காலங்களும் உண்டு. ஆனால் அதையே திரும்ப திரும்ப யோசித்து, வருத்தப்பட்டும் கவலைப்பட்டும் என்ன பிரயோஜனம்! நானும் ஒரு காரியத்தில் ஈடுபட்டு, அது தவறாக கருதப்பட்டு, அதனால், அதையே நினைத்து நினைத்து வருந்தி, கவலைப்பட்டு, மனம் உடைந்துப் போனேன். ஒரு நாள் கர்த்தருடைய சமுகத்தில் அதை வைத்து கதறி அழுது, 'ஆண்டவரே இந்த காரியத்தால் உம்முடைய பிரசன்னத்தை இழந்து தவிக்கிறேன். மனம் அமைதியின்றி தவிக்கிறது. இதற்கு ஒரு முடிவை தாரும்' என்று கதறி அவருடைய பாதத்தில் இறக்கி வைத்தேன். அன்று கர்த்தர் உலகம் தரக்கூடாத சமாதானத்தால் நிரப்பினார். மீண்டும் அந்த காரியத்தைக் குறித்து நான் நினைக்கவே இல்லை. கர்த்தர் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றுவார் என்ற விசுவாசத்துடன் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். . பிரியமானவர்களே, நம்மையும் மீறி சில காரியங்கள் நடக்கும்போது, நாம் கவலைப்படுவதும், வருத்தப்படுவதும் இயற்கை. ஆனால் அதையே நினதை;து நினைத்து, படுக்கும்போதும், உட்காரும்போதும், நடக்கும்போதும் சிந்தித்து நம்மையே வருத்திக் கொண்டிருப்பது தேவையற்றது. 'அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்' என்ற வசனத்தின்படி நம்முடைய கவலைகளை கிறிஸ்துவின் மேல் வைத்துவிட்டு, நம்முடைய கவலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். அவர் மற்றதை பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா! . கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு கலங்கி தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராய் நிற்பவன் யார்? |