மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். - (1 கொரிந்தியர்10:13). . ஒரு மூன்று வயது சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் பீரோவை திறந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துத் தின்று விட்டான். அதற்கு அந்த தாயும், தகப்பனும், அந்த சிறுவனை கன்னத்தில் அறைந்தார்கள். தொடர்ந்து நான்கு மணி நேரங்கள் அடித்து கொண்டே இருந்தார்கள். அந்த சிறு குழந்தை அழுது அழுது தூங்கக் கண்களை மூடினாலும் விடவில்லை. முகத்தில் தண்ணீரை தெளித்து, தோளைப்பிடித்து, குலுக்கி, காதை திருகி தொடர்ந்து நான்கு மணி நேரம் அந்த தண்டனை நிறைவேறியது. அந்த சிறுவன் செய்த தவறுக்கு அவ்வளவு கடினமான தண்டனையா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் அந்த தண்டனை அன்பினால் வெளிப்பட்டது என்பதை பின்னர்தான் அறிய முடிந்தது. . நடந்தது என்னவென்றால், அச்சிறு குழந்தை பீரோவை திறந்து கைக்கு கிடைத்த தூக்க மாத்திரைகளில் பத்தை எடுத்து விழுங்கி விட்டது. டாக்டரிடம் அழைத்து சென்றார்கள். அவர் சுமார் நான்கு மணி நேரம் குழந்தையை தூங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது குழந்தை சரியாகி விடும். ஒரு வேளை தூங்கி விட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறியிருந்தார். ஆகவேதான் அந்த பெற்றோர், குழந்தையை அடித்து, கிள்ளி, காதை திருகி தூங்க விடாமல் செய்து, அந்த உயிரை காப்பாற்றி விட்டனர். ஆம், பெற்றோர் அவனை தண்டிக்கவில்லை. அன்பினிமித்தம் சிட்சித்தனர். . நம்முடைய வாழ்விலும் நமக்கு ஏற்படுகிற சோதனைகளுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது சோதனை பரிட்சையைப் போன்றது, தேவன் தமது பிள்ளைகளை பெலப்படுத்தி, மற்றவர்கள நம்மை பின்பற்றும்படி நல்ல ஒழுங்கை கற்றுக் கொடுக்கவும், சாட்சியாக நம்மை நிலைநிறுத்தவவும், இச்சோதனையை அனுமதிப்பார். . ஆபிரகாம் ஈசாக்கை பலியிட சோதிக்கப்படுதல், யோபுவின் சோதனை போன்றவை இம்முதலாம் வகை சோதனைகள். இவர்களை போன்று அநேக நேரங்களில் நாம் தனிமையில் கஷ்டப்படுவதை போலவும், கைவிடப்பட்டதைப் போலவும் உணரலாம். 'இதோ நான் முன்னாகப் போனாலும் அவர் இல்லை, இடது புறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன், வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்தப்பின்பு நான் பொன்னாக விளங்குவேன்' (யோபு 23: 8-10) என்று யோபு கூறுகிறார். இதிலிருந்து நமக்கு வருகிற சோதனைகள் நம்முடைய மேன்மைக்காக, நம்மை பரிசுத்தப்படுத்தவே என்பதை புரிந்துக் கொள்ளலாம். ஆனாலும் சோதிக்க தேவன் கேடான காரியங்களை செய்வதி;ல்லை. சாத்தானை அனுமதிக்கிறார். இவ்வகை சோதனையை நாம் பொறுமையோடு சகிக்க வேண்டும். அதன்பின் பொன்னாக விளங்குவோம். . இரண்டாவது சோதனை பாவத்தின் மீதான விருப்பம். இந்த சோதனைகளை; மனிதனுடைய பாவ சுபாவத்தால் அல்லது இருதயத்திலிருந்து ஏற்படுகிறது. நாம் பாவத்தில் விழுந்து தேவனுக்கு தூரமாகும்படி சாத்தான் எப்பொழுதும் பாவமான ஆசைகைள, இச்சைகளை நம் இருதயத்தில் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான். இச்சை, பண ஆசை, புகழ், பெருமை எல்லாம் இவற்றுள் அடங்கும். . சாத்தான் ஏவாளை சோதித்தான். ஏவாள் பாவம் செய்தாள். இயேசுவை சோதித்தான், இயேசு சோதனையை ஜெயித்தார். ஆகவே இந்த இரண்டாவது வகை சோதனையானது தேவனிடத்திலிருந்து வருவதில்லை. அது சாத்தானிடத்திலிருந்தும், நம் பாவ மாம்சத்திலிருந்தும் வருகிறது. அது நமது மேன்மைக்கானதுமல்ல. பாவம் செயய வேண்டும் என்ற விருப்பம் சாத்தானிடத்திலிருந்தே வருகிறது. ஆகவே இப்படிப்பட்ட சோதனையிலிருந்து விடுவிக்கப்படும்படி நாம் எப்பொழுதும் விழித்திருந்து ஜெபிக்க வேண்டும். 'நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது' (மாற்கு 14:38) என்று இயேசுகிறிஸ்து கூறினாரே. . முதலாவது சோதனை அல்லது பரிட்சையை நாம் பொறுமையோடு சகிக்க வேண்டும். இரண்டாவது சோதனையை அல்லது பாவ விருப்பத்தை ஜெயிக்க வேண்டும். தேவன் கொடுக்கும் சோதனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும்படியாக போக்கையும் அவர் உண்டாக்குகிறபடியால், நாம் தப்பித்துக் கொள்ள முடியும் ஆனால் சாத்தான் கொடுக்கும் சோதனையில் கர்த்தரின் உதவியோடு, ஆவியானவரின் ஒத்தாசையோடு நாம் ஜெயிக்க வேண்டும். தேவன் நமக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். ஆமென் அல்லேலூயா! . போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம் உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே . இயேசு நல்லவர் இயேசு வல்லவர் என்றென்றும் மாறாதவர் அவர் என்றென்றம் மாறாதவர் |