Friends Tamil Chat

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

17th Feb 2013 - பண ஆசை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
...
பண ஆசை
....

பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். - (லூக்கா 12:15).


டைட்டானிக் கப்பல் 1912-ம் வருடம், ஏப்ரல் மாதம், பனி மலையின் மீது மோதி முழுகி போனது அனைவருக்கும் தெரியும். அதில் ஏராளமான செல்வந்தர்கள் பயணித்தனர். ஆனால் அந்த சோக சம்பவம் நேரிட்டபோது யாருக்கும் தங்கள் செல்வம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.

அந்த கப்பலில் பதினொரு கோடீஸ்வரர்கள் பயணம் செய்தனர். அவர்களுடைய மொத்த சொத்துக்கள் ஏறக்குறைய 200 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிட்டனர். அவர்களில் யாருக்கும், அவர்கள் இருந்த சூழ்நிலையில் பணம் முக்கியமானதாகவே தோன்றவில்லை. இல்லையென்றால், அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு எப்படியாவது சொல்லி பணத்தை சேமித்து வைக்க சொல்லியிருப்பார்கள். அந்த கப்பலில் இருந்து தப்பிய ஆறு பேர்களில் ஒருவரான Major A. H. Peuchen of Toronto கோடீஸ்வரராவார். கப்பலில் தன்னுடைய லாக்கரில் 3,00,000 டாலர்கள் பணமாகவும், மற்றும் நகைகளையும், சொத்து பத்திரங்களையும் வைத்திருந்தார். கப்பல் மூழ்க தொடங்கும்போது. அவர் அந்த பணத்தையும் செல்வத்தையும் எடுக்க திரும்பினார். ஆனால் அடுத்த வினாடி பணத்தை எடுக்க போனவர், மூன்று ஆரஞ்சு பழங்களை மட்டும் எடுத்து கொண்டு திரும்பினார். 'அந்த நேரத்தில் பணத்தை எடுப்பது எனக்கு பரிகாசமாக தோன்றியது' என்று அவர் பின்னர் கூறினார். அந்த நேரத்தில் அவருக்கு அந்த பணம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை.

இன்று அநேகருடைய வாழ்வின் நோக்கமே பணம் சம்பாதிக்க வேண்டும், சொத்துக்களை சேர்க்க வேண்டும் என்பதே. 'பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல' என்று இயேசுகிறிஸ்து கூறினார். எந்த மனிதருக்கும் அவர்கள் மனதை ஐசுவரியத்தின் மேல் வைத்து இருந்தால் அது அவர்களுக்கு ஒருபோதும் ஜீவன் அல்ல. அநேகர் அவர்கள் தலைமுறைக்கு சொத்துக்கள் இருந்தாலும் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுடைய சொத்துக்களினால் பயன் என்ன? அல்லது அவர்களது வாழ்க்கையில் சமாதானம் இல்லாதிருந்தால் அவர்களுடைய சொத்துக்களினால் பயன் என்ன?

' ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்' என்று இயேசுகிறிஸ்து கூறுவதாக லூக்கா 12: 16-21 வரையுள்ள வசனங்களில் காண்கிறோம்.

பணமோ எல்லாவற்றிற்கும் உதவும் என்று வேதத்தில் காண்கிறோம். பணம் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் வாழ்வது அரிது. பணம் இருந்தால்தான் உறவும் நட்பும். பணம் இல்லாவிட்டால் கணவன் மனைவி அன்புக்கூட தூரம்தான். பணமே தேவையில்லை என்று வேதம் கூறவில்லை. ஆனால் பண ஆசை கூடாதென்றுதான் வேதம் கூறுகிறது. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் இரட்சிக்கப்பட்டு, குடும்பமாக கர்த்தருக்கு ஊழியம் செய்து வந்தார். கர்த்தர் அவரை உயர்ந்த நிலையில் வைத்திருந்தார். அநேக வல்லமையான ஊழியர்கள் அவருடைய வீட்டில் தங்கியிருந்து தங்கள் ஊழியத்தை நிறைவேற்றினர். அப்படிப்பட்ட நல்ல மனிதரை பொருளாசை என்னும் கொடிய பாவம் பிடித்தது. எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறி அவருக்குள் வந்தது. அதற்காக எதையும் செய்ய துணிந்த அவர், தான் வேலை செய்யும் இடத்தில் பணத்தை எடுக்க ஆரம்பித்தார். பின்னர் கண்டுபிடிக்கபட்டு, தான் இருந்த இடத்திலிருந்து, வெளியேற நேர்ந்தது. கர்த்தர் அவரை வைத்த உன்னத நிலையிலிருந்து மிகவும் கீழே தள்ளப்பட்டார். நல்ல வேலை, நல்ல நண்பர்கள், ஊழியங்கள் எல்லாவற்றையும் இழந்தார். இன்றும் அந்த சகோதரனை நினைத்து, மிகவும் வருத்தப்படுகிறோம். கர்த்தர்தாமே அவரை திரும்பவும் தம்முடைய ஊழியத்தில் நிலைநிறுத்துவாராக.

அந்த கொடிய பண ஆசையும் பொருளாசையும் நமக்கு சிறிதளவும் வேண்டாம். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல. எத்தனை உண்மையான சத்தியம் இது! போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம் என்று 1 தீமோத்தேயு 6:6-7 வரை வேதம் கூறுகிற அறிவுரையை மனதில் கொண்டு அதன்படி வாழ்வோம்! கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்! ஆமென் அல்லேலூயா!

கட்டின வீடும் நிலம் பொருளும்

கண்டிடும் உற்றார் உறவினரும்

கூடு விட்டு உன் ஆவி போனால்

கூட உன்னோடு வருவதில்லை

ஜெபம்

எங்கள் மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லி வழிநடத்துகிற எங்கள் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். இந்த உலகில் நாங்கள் கொண்டு வந்தது ஒன்றுமில்லை கொண்டு போவதும் ஒன்றுமில்லை. நாங்கள் இந்த உலகத்தில் வாழ்கிற கொஞ்ச நாட்களில் எங்கள் இருதயத்தை பணத்தின் மேலும், சொத்துக்களின் மேலும் பொருட்களின் மேலும் வைத்து, எங்களுக்கென்று நீர் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை, இரட்சிப்பை இழந்து போகாதபடி எங்களை காத்துக் கொள்ளும். ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்று சொன்னீரே, நித்திய ஜீவனை அருளும் உம்மை பற்றிக்கொண்டு அழிந்து போகிற இந்த உலகத்தின் காரியங்களுக்காக எங்கள் மனதை செலுத்தாதபடி எங்களை காத்துக் கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.