சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. - (1 கொரிந்தியர் 1:18). பிரபல தேவ ஊழியரான பில்லி கிரகாம் அவர்கள் கீழ்கண்ட சம்பவத்தை குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்: ரான் பாக்கர் (Ron Baker) என்னும் மனிதரின் வாழ்க்கையில் எல்லாமே தலை கீழாக போய் கொண்டிருந்தது. அவர் தனது சிறுவயதில் பட்ட கெட்ட அனுபவங்களால், சரியாக பேச கூடாதவராக, மற்றும் படிக்காதவராக இருந்தார். அவர் சரியான குடிகாரனாக மாறினார். சூதாட்டத்தில் பங்கு பெறுபவராக, அதைவிட மோசமாக, செய்வினை பில்லி சூனியம் போன்ற கொடிய பழக்கங்களிலும் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு பஸ் டிரைவராக வேலைபார்த்தாலும், அவர் தினமும் மதுபான கடைக்கு போய், குடித்து விட்டு, வீட்டுக்கு வந்து மனைவியை உதைப்பது வழக்கம். அவர் பஸ் ஓட்டுநராக இருந்த காரணத்தால், பில்லி கிரகாமின் கூட்டங்களுக்கு மக்களை கொண்டு செல்பவராக நான்கு நாட்கள் பணியாற்றினார். ஒரு நாள் வேலை முடிய மிகவும் தாமதமானபடியால், அவரால் குடிக்க முடியாமல் போனது. மிகவும் கோபத்துடன் வந்த அவரிடம் அவரது நண்பர், பில்லிகிரகாமின் கூட்டங்களுக்கு அழைத்தார். ஆனால் அவருக்கு இருந்த கோபத்தில் அந்த நண்பரை கன்னாபின்னாவென்று திட்டினார். மனைவி அவரிடம் சொன்னார்கள், 'நான் நான்கு நாளாக அந்த கூட்டங்களுக்கு போய் வருகிறேன். கர்த்தர் கிரியை செய்தார், நான் கர்த்தரிடம் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். நீங்களும் போய் வாருங்கள்' என அவர்களும் கூறினார்கள். ஆனால் அவரோ, முடியாது என்று மனைவியையும் நண்பரையும் இன்னும் அதிகமாக திட்டினார். ஆனாலும் நண்பர் விடாப்பிடியாக, அவரை எப்படியோ சமாதானப்படுத்தி அவருடைய கூட்டத்திற்கு அழைத்து சென்றார். கூட்டத்தில் இருந்த ரான், மேடைக்கு வெகு தூரத்தில் உட்கார்ந்து கேட்டு கொண்டிருந்தார். அவரது இருதயத்தில் 'இந்த மனுஷன் சொல்கிறது எல்லாம் குப்பை' என்று நினைத்து கொண்டே கேட்டு கொண்டிருந்தார். அந்த இரவிலே தேவன் அவரை தொட்டார். அவர் தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்பணித்தார். அதன்பின் இரண்டு வருடங்கள் அவர் குடி பழக்கத்தை விட போராடினார். ஆனால் தேவன் அவரை கிருபையாக அந்த பழக்கம் மற்றும், பில்லி சூனிய கட்டுகளிலிருந்து அவரை விடுவித்தார். ஒரு நல்ல கிறிஸ்தவ பேச்சு பயிற்சியாளர் மூலம் நன்கு பேசவும் பழகி, படிக்கவும் ஆரம்பித்தார். ஒரு வேதாகம கல்லூரியில் சேர்ந்து, வேதத்தை முறையாக கற்று, ஆஸ்திரேலியா முழுவதும் கர்த்தரின் நாமத்தை பறைசாற்றுகிற வல்லமையுள்ள ஊழியராக மாறினார். நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுண்டோ? அன்பார்ந்தவர்களே, இயேசுகிறிஸ்துவிடம் வரும்போது, நாம் இலவசமாக இரட்சிக்கப்படுவது மட்டுமன்றி, நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தில் முழுவதிலும் முழு சுகத்தையும் அடைகிறோம். அதற்கு மேற்கண்ட உண்மை சம்பவம் உறுதிபடுத்துகிறதல்லவா? சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. இந்நாட்களில் கிறிஸ்துவை குறித்து, உபதேசங்களை கேட்கும்போது, அநேகருக்கு அது பைத்தியமாக தோன்றுகிறது. இந்த கிறிஸ்தவர்களுக்கு வேறுவேலையில்லை என்று கூறுகிறவர்களும் உண்டு. ஆனால் அந்த இரட்சிப்பை பெற்றுக்கொள்கிறவர்களுக்கோ, அது தேவபெலனாய், நமது நம்பிக்கையாய், நமது எதிர்காலமாய், நமது ஜீவியத்தையே மாற்றுகிறதாக இருக்கிறது. கிறிஸ்துவினுடைய உபதேசம், ஒரு வேளை சிறந்த சொற்பொழிவாற்றுபவர்களால் கூறப்படாமல் இருக்கலாம், ஆனால், அது பாவ மனிதனை பாவத்திலிருந்து வெளிவர செய்கிறது. ஒருவேளை அது பெரிய தொழில் சம்பந்தபட்டதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அநேக தொழிலதிபர்களும், கோடீஸ்வரர்களும் தங்கள் வாழ்வை கிறிஸ்துவுக்கு ஒப்புகொடுக்க காரணமாய் இருக்கிறது. அந்த உபதேசம், மருந்து கொடுக்கிற சீட்டாக இல்லாமல் இருந்தாலும், ஆனால் எத்தனையோ கோடிக்கணக்கானவர்கள், அந்த உபதேசத்தினால் ஆத்மீக சரீர சுகமடைந்திருக்கிறார்கள். ஏன் அந்த உபதேசத்திற்கு அத்தனை ஆற்றல் என்றால், அது இயேசுகிறிஸ்துவாகிய உலக இரட்சகரை பற்றினது. அவரே நமது விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமாய் இருக்கிறார், அவரே ஆதியும் அந்தமுமாக, வழியும் சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறார். அவரே நமது இரட்சிப்பின் தலைவராக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பவராக, அவரே நமது சமாதான கர்த்தராக, தேவனுடைய ஒரே பேறான குமாரனாக, இருப்பவராகவே இருக்கிறவர். அவருடைய நாமமே அன்றி இரட்சிக்கப்படவதற்கு வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். - (யோவான் 1:12). இந்த அருமையான தேவனை போல் வேறு யாருண்டு? நமது பாவங்களை கழுவி நம்மை இரட்சித்து, நம்மை பரலோக ராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாய் மாற்றும் இந்த தேவனை போல யாருண்டு? இந்த தேவனை விசுவாசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்பட்டு போவதில்லை. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. - (யோவான் 3:18). இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லை இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை கூப்பிடு இயேசு இயேசு என்று உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார் |