உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். - (வெளிப்படுத்தின விசேஷம் 3:8). . ஒரு அரசன் தன்னுடைய அரண்மனைக்கு ஒரு பிரதம மந்திரி தேவையாயிருந்தபடியால், அதற்கான சரியான ஒரு மனிதனை தேடினார். தேடி தேடி கடைசியில் மூன்று பேரை கண்டுபிடித்து, அவர்களில் யார் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்களோ, அந்த மனிதனை பிரதம மந்திரியாக்க தீர்மானித்தார். அதன்படி, ஒரு கதவில் ஒரு பெரிய பூட்டை உண்டு பண்ணி அதை மாட்டி, யார் முதலில் கதவை திறக்கிறார்களோ, அவர் பிரதம மந்திரியாவார் என்று அறிவித்தார். அதன்படி, மூவரும் அதை திறப்பதற்கு முயற்சித்தார்கள். அவர்களில் இருவர், தங்களுக்கு தெரிந்த கணக்கு எல்லாம் போட்டு பார்த்து, எப்படி திறப்பது என்ற மண்டையை உடைத்து கொண்டிருந்தார்கள். மூன்றாவது மனிதனோ, ஒன்றும் செய்யாமல், ஒரு நாற்காலியில் அமர்ந்து, எதையோ யோசித்து கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து மற்ற இருவரும் இன்னும் எப்படி திறப்பது என்று மண்டையை உடைத்து கொண்டிருந்தபடியால், இவர் போய், அந்த கதவின் கைப்பிடியை தொட்டார். உடனே கதவு திறந்துகொண்டது. இந்த கதவு பூட்டப்படவேயில்லை! . இந்நாளிலும் தேவன் நமக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறார். ஆனால் நாம் அதை திறக்கக்கூடாதபடிக்கு, பயம், அவிசுவாசம், அறியாமை, பெருமை போன்ற அநேக பூட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் அது பூட்டப்படாமல் இருக்கிறது என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம். விசுவாசத்தோடு நாம் அதைப் போய் திறந்தால், வெற்றி, நல்ல நிலைமை, நல்ல சந்தர்ப்பங்கள் என்று அநேக காரியங்கள் காத்திருக்கின்றன. உங்கள் வாழ்க்கையிலும், பூட்டப்பட்ட கதவுகள் இருக்கின்றனவா? விசுவாசத்தோடு திறவுங்கள். . நல்ல வேலைக்காக காத்திருக்கிறீர்களா? என் தேவன் எனக்கு திறந்த வாசலை வைத்திருக்கிறார் என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்து முயற்சி செய்யுங்கள். அப்படி நமக்கு தேவையான காரியங்களை 'தேவனே நீர் எனக்கு இந்த காரியத்திற்காக திறந்த வாசலை வைத்திருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம்' என்று விசுவாசத்தோடு திறவுங்கள். கர்த்தர் நமக்கு கிருபை செய்வார். ஒரு வழி அடையும்போது தமது பிள்ளைகளுக்காக புது வழியை திறக்கிற ஆண்டவர் நாம் விசுவாசிக்கிற தேவனல்லவோ! உங்கள் குடும்பத்தில் உங்கள் கணவரோ, மனைவியோ இரட்சிக்கப்படாமல் இருக்கிறார்களோ, கர்த்தர் திறந்த வாசலை வைத்திருக்கிறார் என்று விசுவாசத்தோடு ஜெபியுங்கள். கர்த்தர் நிச்சயமாய் இரட்சிப்பார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொன்னாரே! அவர் அப்படியே செய்வார். தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் என்று நம் தேவனுக்கு ஒரு நாமம் உள்ளது. அவர் திறந்தால் யாரும் பூட்ட முடியாது, அவர் பூட்டினால் யாரும் திறக்க முடியாது. . தேவன் நம்முடைய தேசத்திலும் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக நமக்கு திறந்த வாசலை வைத்திருக்கிறார். எத்தனை தேசங்களில் இந்த கடைசி நாட்களிலும், சுவிசேஷத்திற்கு கதவடைத்திருக்கிறார்கள்! ஆனால் நம் தேசத்தில் திறந்த வாசலை வைத்திருக்கிறார். அதை நாம் பிரயோஜனப்படுத்திக் கொள்வோமா? அடைக்கப்பட்டிருக்கிற தேசங்களிலும் தேவன் திறந்த வாசலை கொடுக்க அந்த தேசங்களுக்காகவும் ஜெபிப்போம். . உனக்காய் யாவையும் செய்திடுவார் நீ அறியா வழியை திறந்திடுவார் தேவன் திறந்த வாசலை யாரும் பூட்டவே முடியாது |