Friends Tamil Chat

புதன், 13 நவம்பர், 2013

14th Nov 2013 - தேவதூதர்களின் பணிவிடை - பாகம் இரண்டு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 நவம்பர் மாதம் 14-ம் தேதி - வியாழக்கிழமை
தேவதூதர்களின் பணிவிடை - பாகம் இரண்டு
....

இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? - (எபிரேயர் 1:14).

.
நேற்றைய தினத்தில் கர்த்தர் எப்படி தமது தூதர்களை அனுப்பி, தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு பணிவிடை செய்ய வைக்கிறார் என்று பார்த்தோம். இன்றும் அதை தொடர்ந்து காண்போம்.

.

போராடும் தேவ தூதர்கள்: சீரியாவின் ராஜா எலிசா தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவுக்கு ஆலோசனைகளை கொடுத்து, அதினால் இராஜா அநேக முறை தன்னை காத்து கொண்டதை அறிந்தவுடன், எலிசா தீர்க்கதரிசியை கொல்லும்படியாக, 'மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்' (2இராஜாக்கள் 6:13-17). எலிசாவின் வேலைக்காரன் பயந்த போது, எலிசாவை சுற்றிலும் தம்முடைய பாதுகாக்கும், அவனுக்காக போராடும் தூதர்களை எண்ணமுடியாத அளவு அனுப்பி பாதுகாத்தார். தானியேலின் ஜெபத்திற்கு உடனே பதில் அனுப்பபட்டாலும், அதை சாத்தானின் தூதர்கள் தடுத்த போது, மிகாவேல் என்னும் தூதர் போராடி, அந்த பதிலை தானியேலுக்கு கொண்டு வந்ததை தானியேலின் புத்தகத்தில் பார்க்கிறோம். அதுப்போல நமக்காக, நம்முடைய ஜெபங்களின் பதிலை தடுக்கும் சாத்தானின் தூதர்களிடமிருந்து போராடி, தேவனிடத்திலிருந்து பதிலை கொண்டு வந்து கொடுக்கும் தூதர்கள் நம் கண்களுக்கு தெரியாவிட்டாலும் அவர்கள் உண்டு.

.

விடுதலையாக்கும் தூதர்கள்: பேதுரு சுவிசேஷத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, சபையார் ஊக்கமாக பேதுருவுக்காக ஜெபித்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது, 'ஏரோது அவனை வெளியே கொண்டு வரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக்காத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது. (அப்போஸ்தலர் 12:6,7) அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான் (10ம் வசனம்). இரண்டு சங்கிலிகளினால் கட்டப்பட்டு, இரண்டு காவற்காரர் மத்தியில் கடுமையான முறையில் சிறையில் வைக்கப்பட்டிருந்த பேதுருவை தூதன் வந்து விடுதலையாக்கியதை இந்த இடத்தில் காண்கிறோம்.

.

பாதுகாக்கும் தூதர்கள்: நம் ஒவ்வொருவருக்கும் நம்மை காக்கும்படி தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிற தூதர்கள் உண்டு. 'இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்' (மத்தேயு 18:10) என்று இயேசுகிறிஸ்து கூறினார். பத்து அடி உயரத்தில் இருந்து விழும் சிறு குழந்தை ஒரு சிராய்ப்பும் இல்லாமல் தப்பி விடுகிறது, ஆனால் அதே உயரத்திலிருந்து விழும் மனிதன், கைகளில் கால்கள், முதுகு தண்டுவடம் என்று எல்லாவற்றிலும் முறிவை பெற்று கொள்கிறான். தேவ தூதர்கள் பாதுகாப்பினால் அவர்கள் காக்கப்படுகிறார்கள்.

.

தூதர்களுக்கு உணர்ச்சிகள் உண்டா? ஆம், நிச்சயமாக உண்டு, நாம் பாவம் செய்யும்போது, அதை காண்கிற தூதர்கள் நிச்சயமாக வருத்தப்படுவார்கள். ஆனால், 'மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது' - (லூக்கா 15:10)

.

மனிதர்கள் தூதர்களாக முடியுமா? இல்லவே இல்லை. ஒருவேளை உதாரணத்திற்கு சொல்லலாம், இந்த சகோதரன் ஒரு ஏஞ்சலை போல வந்து உதவினார் என்று, ஆனால், தேவனால் உருவாக்கப்பட்ட தூதர்கள் ஒரு வகை, அதுப்போல தேவனால் உருவாக்கப்பட்ட மனித ஜாதி ஒருவகை. மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும் போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள் (மாற்கு 12:25) இந்த வசனத்தில் மனிதர்கள் தேவதூதர்களை போல இருப்பார்களே, தவிர தேவதூதர்கள் ஆக மாட்டார்கள். சில மதங்களில் பரலோகத்தில் அவர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள், அவர்களுடைய மனைவிகளும் மிகவும் அழகாக இருப்பார்கள் என்றும், அங்கும் இந்த உலகத்தில் இருப்பது போல உறவுகள் இருக்கும் என்று கூறுகிறார்கள். வேதத்திலும் அப்படி இயேசுகிறிஸ்துவிடம் கேள்வி கேட்டவர்களும் உண்டு. 'ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங் கொள்ளுகிறீர்கள்? மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும் போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினார்' (மாற்கு 12:23-25). அங்கு கணவன் மனைவி உறவுகள் இருக்கப்போவது இல்லை. ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்வோம். ஆனால், கணவன் மனைவி உறவு இருக்காது.

.

தேவதூதர்களிடம் நாம் ஜெபிக்க கூடாது. வேதத்தில் தூதர்களை குறித்து ஏராளமாக எழுதப்பட்டு இருந்தாலும், ஒரு இடத்திலும் அவர்களிடம் வேண்டி கொள்ள சொல்லி எழுதப்படவில்லை. வேதத்தில் இல்லாத காரியத்தை ஒருநாளும் நாம் செய்யக்கூடாது. அதுப்போல நாம் தூதர்களை தொழுது கொள்ள கூடாது. வெளிப்படுத்தின விசேஷத்தில் பரிசுத்த யோவான் அங்கு நடந்த காட்சிகளை கண்டு, ஒரு தூதனை வணங்கும்படி அவனது கால்களில் விழுகிறார். 'அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன், அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்' - (வெளிப்படுத்தின விசேஷம் 19:10) தேவதூதன், அப்படி செய்யக்கூடாது என்று கூறுகிறார்.

.

உலகில் எத்தனை எத்தனையோ உண்மை சம்பவங்கள் தேவதூதர்களினால் சம்பவித்ததை கூறமுடியும். ஆனால், சில வேளைகளில், கிறிஸ்தவ இளம் பெண்கள் கற்பழிக்கப்படும்போது, அநியாயமாக கொல்லப்படும்போது, அநியாயமாக தாக்கப்படும்போது எங்கே இந்த தூதர்கள் என்று நாம் கேட்கலாம்! தூதர்கள் அங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும், எங்கே என்கிற கேள்விக்கு, சரியான பதிலை காண முடியாவிட்டாலும், இங்கே உலகத்தில் துன்பமான காரியங்களும், துயர சம்பவங்கள் நேரிடும்போது, நம் கண்கள் காணாத பரலோகத்தில் அதை குறித்ததான காரியங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. உதாரணத்திற்கு யோபு இங்கு உலகத்தில் அத்தனை துயர சம்பங்களை சந்தித்தபோது, பரலோகத்தில் சாத்தான், தேவனிடம் அனுமதி வாங்கி கொண்டு யோபை துன்ப்படுத்துகிறான். ஆகவே காண்கின்ற இந்த உலகில் நாம் அவற்றை புரிந்து கொள்ள முடியாது. மற்றும் யோபிற்கு தேவன் பதில் கூறுகையில், எதினால் இந்த காரியங்கள் சம்பவித்தது என்பதற்கு பதில் கூறாமல், 'நான் சகலத்தையும் ஆளுகிறவர், நான் செய்வதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது, என் மேல் உன் நம்பிக்கை இருக்கும்போது நான் உன்னை தாங்கி நடத்துவேன்' என்று மட்டும் உறுதியளிக்கிறார். ஆகவே தேவன் நம்முடைய வாழ்வில் துன்பங்களையும் துயரங்களையும் அனுமதிப்பது ஏதோ ஒரு காரணத்திற்காகவே. ஒருவேளை தூதர்களின் பாதுகாப்பும், வழிநடத்துதலும் இல்லாமற் போகலாம், ஆனால் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்ற தேவனின் வாக்குதத்தம் நம்மோடு இருக்கும்வரை நாம் எதை குறித்தும் கலங்க தேவையில்லை. ஆமென் அல்லேலூயா!

.

மேலான தூதரோடும் நான் தேவனை துதிப்பேன்

பொற் கிரீடம் தலை மேல் தரித்து வாழுவேன்

என் மீட்பர் முன் ஆனந்தம் நான் பெற்று வாழ்வதே

வாக்குகெட்டாத இன்பம் ஆனந்த பாக்யமே!

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் துதிக்கும், கனத்திற்கும், மகிமைக்கும் பாத்திரர் நீர் ஒருவரே தகப்பனே! தூதர்கள் உம்முடைய ஊழியக்காரர்களாக இருந்து, உம்மை ஓயாமல் துதித்து கொண்டிருக்கும் துதிகளின் மத்தியில் நீர் வாசம் செய்கிறவர் ஐயா. இந்த நாளிலும் நாங்கள் தூதர்களை குறித்து அறிந்து கொள்ள செய்த கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். எங்கள் தேவையான நேரங்களில் அவர்கள் எங்களுக்கு செய்கிற பணிவிடைக்காக நாங்கள் உம்மை துதிக்கிறோம். தூதர்களின் பணிவிடை இல்லாவிட்டாலும், எங்கள் மேல் கரிசனை உள்ள தேவன் நீர் உண்டு என்பதை நாங்கள் உணர்ந்து, எங்களை கைவிடாத தேவன் எங்களோடு உண்டு என்று உம்மை மாத்திரம் சார்ந்து வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..
...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.