Friends Tamil Chat

வியாழன், 31 ஜனவரி, 2013

31st Jan 2013 - சர்வ வல்லமையுள்ள தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜனவரி மாதம் 31-ம் தேதி - வியாழக்கிழமை
சர்வ வல்லமையுள்ள தேவன்
.....

ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையம் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. - (எரேமியா 32:17).

sssingh
1908-ம் ஆண்டு திபெத்திற்கு (Tibet) 19 வயதுள்ள இளைஞனாய் ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) அவர்கள். திபெத்தில் புத்தமதமே பிரதானமாக இருந்ததால் அம்மதம் நசிந்து போய்விடக்கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது என்று கடுமையான சட்டமிருந்தது. இருப்பினும் துணிந்து அங்கு சென்றார். ஒரு முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையே சுவிசேஷத்திற்கு வரவேற்பில்லை. அவர்கள் சுந்தரை பிடித்து அவ்வூர் பிரதம லாமாவிடம் கொண்டு வந்தனர். அனுமதியின்று ஊருக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு மதத்ததை பிரசங்கித்த குற்றத்திற்காகவும் லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

.

திபெத்தில் மரணதண்டனை கொடுக்கும் முறைப்படி சுந்தர் ஒரு கிணற்றிற்கு அருகில் கொண்டு செல்லபட்டார். அவரது உடைகளை உரிந்து விட்டு எலும்பு குப்பை நிறைந்த இருண்ட கிணற்றிற்குள் தூக்கி எறிந்தார்கள். விழுந்த வேகத்தில் வலது கைதோள் பட்டையில் அடிபட்டு மயக்கமுற்றார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது எங்கும் இருளாக இருந்தது. இவருக்குமுன் இந்த கிணற்றில் எறியப்பட்ட பலரது அழுகிய மாம்சமும் எலும்புகளும் எங்கும் நிறைந்து தாங்கமுடியாத துர்நாற்றம் வீசியது. கை வைத்த இடமெல்லாம் அழுகிய மாம்சமும் எலும்புகளுமிருந்தன. தோளில் அடிபட்ட இடம் தாங்க முடியாத வலியை கொடுத்தது. அப்பொழுது இயேசு இரட்சகர் வேதனையடைந்து உச்சரித்த வார்த்தைகள் தான் அவர் நாவிலும் வந்தன. 'ஏன் என்னை கைவிட்டீர்?' துர்நாற்றம் பசி, தாகம், வேதனை இவைகளின் மத்தியில் சுந்தருக்கு தூக்கம் வரவில்லை.

.

மூன்றாம் நாள் இரவில் ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார். திடீரென கிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. பேராவலோடு அண்ணாந்து பார்த்தார். மேலேயிருந்த மனிதர் 'கீழே விடப்படும் கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்' என்றார். அதன்படியே செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தரை தூக்கி கிணற்றிற்கு வெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வேளையில் மறுபடியும் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது. தனக்கு உதவிய நபருக்கு நன்றி செலுத்தும்படி திரும்பினார். என்ன ஆச்சரியம்! அங்கு யாருமில்லை. அவருடைய தோள்பட்டை வலியும் மறைந்து போனது. அப்போது தன்னை காப்பாற்றியது கர்த்தர் என அறிந்து தேவனுக்கு நன்றி செலுத்தினார்.

.

பிரியமானவர்களே, நாம் ஆராதித்திக்கிற தேவன் சர்வ வல்லமையுளளவர். தம்மை நம்புகிறவர்களுக்கு இயற்கைக்கு அப்பாபற்பட்ட அற்புதங்களை செய்து அவர்களை விடுவிக்க வல்லவர். தமக்காக வைராக்கியம் பாராட்டுகிறவர்களுக்காக வைராக்கியம் பாராட்டும் தேவன் நம் தேவன். தேவனுக்காக வைராக்கியம் பாராட்டின தானியேலை காப்பாற்ற சிங்கங்களின் வாயை கட்டிய தேவனல்லவா நம் தேவன்! அந்த மூன்று எபிரேய வாலிபர்கள் நேபுகாத்நேச்சார் செய்து வைத்த சிலையை வணங்காதபடி வைராக்கியம் பாராட்டிய போது, அவர்களை ஏழு மடங்கு எரியும் சூளையில் தூக்கி எறிந்த போது, தேவன் அவர்களுக்காக வைராக்கியம் பாராட்டி நான்காவது ஆளாக, அவரே இறங்கி வந்து அவர்கள் நடுவில் உலாவி, நெருப்பின் வாசனையும் அவர்கள் மீது வீசாமல், அவர்களை வெளியே கொண்டு வந்த தேவன் அல்லவா நம்தேவன்! ஆம் நாம் ஆராதிக்கும் தேவன் சர்வவல்லமையுள்ள தேவன். நமக்காக யுத்தம் செய்கிறவர். ஆம், அவராலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. தம் நாமத்தினிமித்தம் வைராக்கியம் பாராட்டும்போது, அவர்களுக்காக தாமே இறங்கி வந்து, அவர்களை தப்புவித்து தம் நாமத்தை மகிமைபட செய்கிற தேவன் அவர்! அவரை ஆராதிக்கிற நாம் நிச்சயமாக பாக்கியவான்கள்தான் அல்லேலூயா!

.

நாம் ஆராதிக்கும் தேவன் இயேசு

நம்மை தப்புவிக்க வல்லவர்

அவர் ஜீவனுள்ளவர் வல்லமையுள்ளவர்

நேற்றும் என்றும் மாறாதவர்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசிக்கிற எங்கள் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் ஆராதிக்கிற எங்கள் பரிசுத்தமுள்ள தேவன் சர்வ வல்லமையுள்ள தேவனாக இருக்கிறதற்காக ஸ்தோத்திரம். உம்முடைய நாமத்திற்காக வைராக்கியம் பாராட்டும்போது, அவர்களை அவர்களிலும் பலவான்களுடைய கைகளுக்கு தப்புவிக்கிறவரே உம்மை துதிக்கிறோம். உம்மால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை தகப்பனே. எங்களுக்காக யுத்தம் செய்கிறவர் நீரே, உமது நாமத்தை உயர்த்துகிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.