Friends Tamil Chat

திங்கள், 28 ஜனவரி, 2013

28th Jan 2013 - பலிபீடத்தை கட்டுவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜனவரி மாதம் 28-ம் தேதி - திங்கட் கிழமை
பலிபீடத்தை கட்டுவோம்
...

தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார். அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான். -(ஆதியாகமம் 35: 1-3)

...
மேற்கண்ட வசனத்தில்; தேவன் யாக்கோபிடம் 'உனக்கு தேவன் தரிசனமான இடத்தில் அவருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கு' என்று கட்டளையிடுகிறார். அதை கேட்ட யாக்கோபு, தன் வீட்டாரையும், தன்னோடு கூட இருந்த மற்றவர்களையும் பார்த்து, 'உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்' என்று அழைக்கிறார்.
.
தேவன் அவரிடம் 'ஒரு பலிபீடத்தை உண்டாக்கு' என்றுதான் சொல்கிறார். ஆனால் யாக்கோபோ 'உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கி உங்களை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று அவர்களை சுத்தம் செய்கிறார். கர்த்தரை நேசிக்கிறவர்கள் அவருடைய இருதயத்தை அறிந்திருக்கிறார்கள். அந்நிய தெய்வங்களோடும், அசுத்தத்தோடும் கர்த்தருக்கு பலிபீடம் கட்ட முடியாது என்று யாக்கோபு அறிந்திருந்தபடியால், தேவன் சொல்லாத காரியங்களையும் அவர் தன்னோடு இருப்பவர்களுக்கு செய்யும்படி சொல்கிறார். அவர் அப்படி சொன்னவுடனே, அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான் (4ம் வசனம்).
.
விசுவாசிகளாயிருந்தாலும், அவிசுவாசிகளாயிருந்தாலும் இயேசுகிறிஸ்துவுக்கென்று ஒரு இடம் ஒவ்வொருவரின் இருதயத்திலும் நிச்சயமாய் உண்டு. 'நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான். பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கின்றோம் என்றான். அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்' (அப்போஸ்தலர் 16:25-30). சிறைச்சாலைக்காரன் கர்த்தரை அறியாதிருந்தும், அவனுக்குள் கர்த்தருக்கென்று ஒரு இடம் இருந்தபடியால் அவன் கர்த்தரை குறித்து சொன்னபோது, அவரை ஏற்றுக் கொண்டான். அப்படி தேவனுக்கென்று ஒவ்வொருவருடைய இருதயத்திலும் ஒரு இடத்தை கர்த்தர் கொடுத்திருக்கிறபடியால், ஒவ்வொருவரும் கர்த்தருக்கென்று இருதயத்தில் ஒரு பலிபீடத்தை கட்டவே வேண்டும்.
.
'அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான்' (ஆதியாகமம் 35:4). யாக்கோபு தன் குடும்பத்தாருக்கு கட்டளையிட்டபோது, அவர்கள் உடனே கீழ்ப்படிந்து, தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள். அவர்கள் தேவனை தொழுது கொள்ளுகிறவர்களாயிருந்தாலும், அவர்களுக்குள்ளே அந்நிய தெய்வங்கள் இருந்தது. அவற்றை எல்லாம் வாங்கி யாக்கோபு ஒரு மரத்தின் கீழ் புதைத்து போட்டார்.
.
நம் ஒவ்வொருவரின் இருதயத்திலும், நம்முடைய அந்நிய தெய்வங்கள் ஏதாவது இருந்தால், பாவமான காரியங்கள், தேவன் விரும்பாத அருவருக்கிற பாவங்கள், நம்மை தேவனை விட்டு பிரிக்கிற காரியங்கள் இருந்தால் அவற்றை நம்மை விட்டு அகற்றி, நம்மை சுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். 'இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்' (மத்தேயு 15:19) என்று இயேசுகிறிஸ்து கூறினார். இவற்றை எல்லாம் அகற்றி விட்டு, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, நம் பலிபீடத்தை நம் இருதயத்தில் கட்டுவோமானால், கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார். நம்முடைய எதிரியாகிய சாத்தான் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
.
யாக்கோபின் குடும்பத்தாரும், அவரோடு இருந்த மற்றவர்களும் அந்நிய தெய்வங்களை அகற்றி, தங்களை சுத்தம் செய்து கொண்டு, கர்த்தர் கட்டளையிட்டபடி பெத்தேலுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அப்போது அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள் (ஆதியாகமம் 35:5).
.
அப்படி சுத்தம் செய்து கொண்டு அவர்கள் கர்த்தருக்கென்று பலிபீடத்தை கட்டும்படி பிரயாணம் செய்தபோது, அவர்களுடைய எதிரிகளால் அவர்களுக்கு எந்த உபத்திரவமும், எந்த பாடுகளும், எந்த துன்பங்களும் வராதபடி, தேவன் அவர்களை காத்துக் கொண்டார்.
.
நம் இருதயத்தில் பரிசுத்தமான பலிபீடத்தை கட்டுவோம். கர்த்தர் அதில் நாம் ஏறெடுக்கும் நன்றி பலிகளை பிரியமாய் ஏற்றுக்கொள்வார். நம் எதிரியாகிய சாத்தான் நம்மை பின்தொடராதபடி காத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா!

.


நன்றி பலிபீடம் கட்டுவோம் - நல்ல

தேவன் நன்மை செய்தார்

செய்த நன்மை ஆயிரங்கள்

சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களில் பாவம் இருக்குமானால், அந்நிய தெய்வங்கள் எங்கள் இருதயத்தில் காணப்படுமானால் அதினால் பாவங்களும் சாபங்களும் எங்களை தொடருமே, தேவனே அவற்றை அகற்றி விட்டு, எங்கள் தேவனுக்கு எங்கள் இருதயத்தில் பரிசுத்த பலிபீடத்தை கட்டவும், தேவன் எங்கள் பலிகளை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிக்கிறோம். நீர் விரும்புகிற பரிசுத்தத்தில் நாங்கள் வளர கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.